மஹிந்த எம்.பியானாலும் பதவியில் நிலைக்க முடியாது
மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் மீள்வருகை குறித்து எவரும் அச்சம் அடையத்தேவையில்லை. தப்பித்தவறியாவது மஹிந்த பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டாலும் அவரால் அந்தப் பதவியில் நீண்டகாலம் நிலைத்திருக்க முடியாது என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. ஜனாதிபதி என்ற பதவியையும் முழு அரச அதிகாரங்களையும் வைத்துக்கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியாத மஹிந்த ராஜபக்ஷ நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் தனது பிறந்த இடமான ஹம்பாந்தோட்டையில் கூட போட்டியிட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக ஜே.வி.பி.யின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
ஜே.வி.பி.யின் தலைமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்று தங்காலையில் தங்கியிருந்த மஹிந்த ராஜபக்ஷ பன்சலைகளுக்குச் சென்றே தற்பொழுது தேர்தலில் போட்டியிட அனுமதி பெற்றுள்ளார்.
தப்பித் தவறி அவர் பாராளுமன்ற உறுப்பினரானாலும் அவரால் அந்தப் பதவியில் நீண்டகாலம் நிலைக்க முடியாது. ஏனெனில் அவர் கடந்த ஆட்சியில் செய்த மோசடிகள் குறித்த விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கும்போது நீதிமன்றத்தின் முன்னால் சென்று தண்டனையை அனுபவிக்க வேண்டிவரும். மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் எதிர்காலம் சூன்யமாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராவார் என்பதில் கூட எமக்கு நம்பிக்கையில்லை. அவர் கடந்த காலங்களில் கூட தனது சொந்தப் பணத்தில் அரசியல் செய்யவில்லை. அதிகாரத்தை வைத்துக்கொண்டு அரசாங்கத்தின் பணத்திலேயே அரசியல் செய்தவர். இதனைத் தடுப்பதற்கு சட்டம் இருந்தாலும் அதனை அவர்கள் மதிக்கப்போவதில்லை. இவ்வாறான நிலையை மாற்றுவதற்கு மக்கள் சிறந்த தீர்மானம் எடுப்பதே சரியான வழியாகும் என்றும் ரில்வின் சில்வா கூறினார்.
அதிகாரத்தில் தொடர்ந்தும் இருப்பதற்கு நப்பாசையுடன் செயற்படுபவர்களை எவ்விடத்தில் வைக்க வேண்டும் என்பதை மக்கள் இந்தத் தேர்தலில் தீர்மானிப்பார்கள் என்றார்.
அரசாங்கத்தை அமைக்கக் கூடிய அதிகாரபலத்தை வழங்குமாறு நாம் மக்களிடம் கோருகின்றோம். தேசத்தின் மனசாட்சி என்ற தொனிப்பொருளில் தாம் இம்முறை தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்கவிருப்பதாகவும் மக்கள் தமக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் ஜே.வி.பி. யின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply