போகோகரம் அச்சுறுத்தல்: கேமரூன் நாட்டில் இருந்து ஒரே நாளில் 2 ஆயிரம் நைஜீரியர்கள் வெளியேற்றம்
நைஜீரியாவில் அட்டூழியம் செய்துவரும் போகோகரம் தீவிரவாதிகள் அண்டை நாடான கேமரூனில் பெரிய அளவிலான தற்கொலைப் படை தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் கேமரூனில் தங்கியிருந்த சுமார் 2 ஆயிரம் நைஜீரியர்களை அந்நாடு ஒரே நாளில் வெளியேற்றியுள்ளது.
கடந்த மாதம் 12 முதல் 25-ம் தேதிக்குள் கேமரூனில் நடைபெற்ற மூன்று தீவிரவாத தாக்குதல்களில் 44 பேர் பலியாகினர். இதையடுத்து, மேலும் சில பெரிய தாக்குதல்களை நடத்த போகோகரம் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக கேமரூன் நாட்டு உளவுத்துறை வட்டாரங்கள் எச்சரித்தன.
இதையடுத்து, கவுசேரி என்ற நகரில் நைஜீரியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் அந்நாட்டு குடியுரிமை அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை அதிரடி சோதனை நடத்தினர். உரிய ஆவணங்கள் இல்லாமல் அங்கு தங்கி இருந்த சுமார் 2 ஆயிரம் நைஜீரியர்கள் லாரிகளில் ஏற்றப்பட்டு, கேமரூன் நாட்டு எல்லைப்பகுதிக்கு வெளியே இறக்கி விடப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நைஜீரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக போகோகரம் தீவிரவாதிகள் நடத்திவரும் தாக்குதலுக்கு இதுவரை 15 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது, நைஜீரியாவின் அண்டை நாடுகளான சாட், கேமரூன் உள்ளிட்ட நாடுகளிலும் இவர்கள் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், தற்போது கேமரூனில் இருந்து வெளியேற்றப்பட்ட அனைவரும் போக்கோ ஹராம் தீவிரவாதிகள் அல்ல; நைஜீரியாவில் அட்டூழியம் செய்துவரும் போகோகரம் தீவிரவாதிகளுக்கு பயந்து அண்டை நாடான கேமரூனில் அடைக்கலம் தேடிவந்த அப்பாவி மக்களை அந்நாட்டு அரசு வெளியேற்றியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply