எவன்கார்ட் நிறுவனம் மூடப்பட்டமையால் 5000 பேர் வேலையிழப்பு
எவன்ட் கார்ட் நிறுவனத்தை மூடியமையால் 5000 பேர் வேலைவாய்ப்புக்களை இழந்திருப்பதாக எவன்ட் கார்ட் நிறுவனத்தின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். எவன்ட் கார்ட் நிறுவனத்தின் செயற்பாடுகளை அரசாங்கம் கடற்படையினரிடம் ஒப்படைத்திருப்பதால் அதில் பணியாற்றிய 5000ற்கும் அதிகமானவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டிருப்பதாக குறித்த நிறுவனத்தின் வர்த்தக கப்பல் பாதுகாப்புக்கான முகாமையாளர் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கேணல் நிலந்த ஜயவீர குறிப்பிட்டார்.
கடற்கொள்ளையர்களின் ஆபத்து அச்சம் காணப்பட்ட 150 வெளிநாட்டு கப்பல்கள் எவர்ன் கார்ட் நிறுவனத்திடம் பாதுகாப்பு சேவையைப் பெற்றிருந்ததாகவும், அந்தக் கப்பல்கள் தற்பொழுது வேறு நிறுவனத்திடமிருந்து பாதுகாப்பு சேவையை பெறவேண்டியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
உடனடியாக இந்த நிறுவனத்தை மூடியமையால் சில வெளிநாட்டுக் கப்பல்கள் மாற்று பாதுகாப்பைப் பெறமுடியாது திண்டாடுகின்றன. ஐந்து நாடுகளில் திறக்கப்பட்டிருந்த குறித்த நிறுவனத்தின் கிளைகள் மூடப்பட்டிருப்பதால் அங்கு பணியாற்றியவர்கள் மீண்டும் நாட்டுக்குத் திரும்பவேண்டி ஏற்பட்டுள்ளது.
எவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தில் காணப்பட்ட சில ஆயுதங்கள் சட்டவிரோதமானவை என்ற குற்றச்சாட்டை மறுத்திருக்கும் ஜயவீர, ரத்னா லங்கா என்ற அரசாங்க நிறுவனத்தினால் அதிகாரபூர்வமாக வழங்கப்பட்ட ஆயுதங்களே மிதக்கும் களஞ்சியத்தில் காணப்பட்டதாகவும் கூறினார். எவன்ட் கார்டிலிருந்து கடற்படையினர் ஆயுதங்களை மீளப்பெற்றி ருப்பதுடன், அதில் பணியாற்றியவர்களை குற்றவாளிகள் போன்று நடத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாம் எந்த தவறும் இழைக்கவில்லை. எமது செயற்பாடுகள் யாவும் அரசாங்கத்தின் அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்டது. எமது நாட்டுக்காக நிறுவனத்தின் ஊடாக பெரும் எண்ணிக்கையான அந்நிய செலாவணியை ஈட்டியிருந்தோம் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை, ஜெயவீரவின் கருத்துக்களை மறுத்திருக்கும் கடற்படை பேச்சாளர், கடந்த சனிக்கிழமை வரை 37 கப்பல்களுக்கு எதுவித இடையூறுமின்றி பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும், கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கைகள் எதுவித தடையுமின்றி சுமுகமாக முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply