பிரபல பக்திப் பாடகர் பித்துக்குளி முருகதாஸ் காலமானார்

murugathasபிரபல பக்திப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ்(95) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். பாலசுப்ரமணியம் என்ற இயற்பெயருடன் கோவையில் 1920-ம் ஆண்டு பிறந்த பித்துக்குளி முருகதாஸ், தமிழ்க் கடவுளான முருகன் மீது நெஞ்சை உருக்கும் ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களை இயற்றி, இசையமைத்துப் பாடியுள்ளார்.தலையில் காவித்தலைப்பாகை உடுத்தி, முகத்தில் கூலிங்கிளாஸ் கண்ணாடி அணிந்து சற்றே வித்தியாசமான முருக பக்தராக காட்சியளித்த பித்துக்குளி முருகதாஸ், கந்தர் அனுபூதி உள்பட முருகன் மீது பல பக்திப்பாடல்களை இயற்றியுள்ளார். கண்ணன் மீதான பாடல்களையும் இயற்றி இசையமைத்துள்ளார். அவர் பாடிய ‘அலைபாயுதே கண்ணா’ மற்றும் தெய்வம் திரைப்படத்தில் வரும் ‘நாடறியும் நூறு மலை’ பாடல்கள் மிகவும் பிரபலமானவை.

சிறுவயதில், தனது ஊரின் தெருவில் விளையாடும் போது, வழியே சென்ற ஒருவர் மீது இவர் வீசிய கல் பட்டு காயமடைந்த பெருமாள் பக்தரும், மகா ஞானியுமான பிரம்மானந்த பரதேசியார், தனது நெற்றியில் இருந்து இரத்தம் வடிய… ‘அடேய்…நீ என்ன பித்துக்குளியா? (பைத்தியமா)? ஒருநாள் இல்லை ஒருநாள், என்னைப் போலவே நீயும் ஆகப் போகிறாய்’ என்று வேடிக்கையாக கூறவே, அதுவே பித்துக்குளி முருகதாஸ் ஆக நிலைத்துவிட்டது. முருகனுக்கு தாசனாய், முருகன் மீது பைத்தியமாய் இருப்பதால் தனது பெயருக்கு முன்னால் ‘பித்துக்குளி’யை இவர் சேர்த்துக்கொண்டார்.

சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடித் துறவறத்தில் மூழ்கினார். இந்தியாவில் வெள்ளையருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற இவர்மீது 1936-ம் ஆண்டு போலீசார் நடத்திய முரட்டுத்தனமான தாக்குதலில் பித்துக்குளி முருகதாசின் இடதுகண் பார்வை பறிபோனது. அதிலிருந்து இவர் கருப்பு கண்ணாடி அணியத் தொடங்கினார்.

தன்னுடன் கச்சேரிகளில் பக்திப்பாடல்களை பாடிய தேவி சரோஜா என்பவரை தனது அறுபதாவது வயதில் மணந்து கொண்டார். இந்த தம்பதியர் ராதா கல்யாணம் பாடல்களை எல்லாம் பாடிப் பிரபலம் ஆக்கினர்!

தென்னாப்பிரிக்கா, இலங்கை, அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இசைக்கச்சேரிகளை நடத்திய பித்துக்குளி முருகதாஸ் தியாகராஜர் விருது, தமிழக அரசின் கலைமாமணி, சங்கீத சாம்ராட், தியாகராஜர் விருது உள்ளிட்ட பல இசை விருதுகளை பெற்றுள்ளார்.

சிறந்த முருகபக்தராக கருதப்படும் பித்துக்குளி முருகதாஸ், சென்னையை தலைமையிடமாக கொண்டு ஸ்ரீ ஜோதிர் மாயா தேவி அறக்கட்டளையை தொடங்கினார். தனது பக்தி பாடல் கச்சேரிகளின் மூலம் கிடைக்கும் தொகையை வைத்து பல ஏழை, எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்கும் மிக உயரிய சமூகத்தொண்டாற்றி வந்தார்.

வெகுநாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தீவிர முருகபக்தரான பித்துக்குளி முருகதாஸ், சூரசம்ஹார தினமான இன்று சென்னையில் உள்ள தனது இல்லத்தில் அதிகாலை மரணமடைந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply