ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக்கட்ட முகாமிட்டுள்ள படையினரை சந்திக்க சிரியாவுக்கு செல்லும் பிரான்கோயிஸ் ஹாலண்டே
சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் தாக்குதல் நடத்திவரும் பிரான்ஸ் நாட்டின் விமானப்படையினருக்கு ஆதரவாக சிரியா கடற்பகுதியில் முகாமிட்டுள்ள விமானம்தாங்கி கப்பலை பார்வையிட பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டே விரைந்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 அப்பாவி மக்கள் பலியானதை அடுத்து, ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஹாலண்டே சபதமேற்றார்.
இதையடுத்து, சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் முகாம்கள் மீது பிரான்ஸ் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. மேலும், ஐ.எஸ். தீவிரவாதிகள் மீதான தாக்குதலை இரட்டிப்பாக்க அனுமதிக்கவேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் சமீபத்தில் ஒரு தீர்மானத்தை கொண்டுவந்தது.
தாக்கல் செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் அனைத்து உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு இடையிலான கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் ’சார்லஸ் டி கவுலே’ என்ற விமானம்தாங்கி போர்க்கப்பல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த கப்பலின் துணையுடன் சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ் தீவிரதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் உச்சக்கட்ட விமானப்படை தாக்குதல்களை பிரான்ஸ் விமானப்படை தொடங்கியுள்ளது.
38 போர் விமானங்களை நிறுத்திவைக்கும் வசதி கொண்ட இந்த கப்பலில் இருந்து புறப்பட்டுச் செல்லும் பிரான்ஸ் நாட்டு போர் விமானங்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளின் இருப்பிடங்களின்மீது வெகுதுல்லியமாக குண்டுகளைவீசி தாக்குதல் நடத்திவிட்டு, பத்திரமாக கப்பலில் வந்து தரையிறங்குகின்றன. இதன்மூலம், இந்த பிராந்தியத்தில் பிரான்ஸ் விமானப்படையின் தற்போதைய பலம் மும்மடங்காக அதிகரித்துள்ளது.
சிரியாவில் உள்ள ரக்கா நகரை இலக்காக நிர்ணயித்து ரபேல் மற்றும் மிரேஜ்-2000 ரக விமானங்கள் நேற்றும் ஆவேச தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு சொந்தமான பல பதுங்குமிடங்கள் மற்றும் போர்ப்பயிற்சி பாசறைகள் தகர்க்கப்பட்டதாக பிரான்ஸ் ராணுவத்தின் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ’சார்லஸ் டி கவுலே’ விமானம்தாங்கி போர்க்கப்பலை பார்வையிடவும், அந்த கப்பலில் முகாமிட்டுள்ள விமானப்படை மற்றும் கடற்படை வீரர்களை சந்தித்து ஊக்கமளிப்பதற்காக பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டே இன்று மத்திய தரைக்கடல் பகுதிக்கு விரைந்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply