நிதி, செலவினங்களை சிந்திக்காது அனர்த்தங்களில் பாதிப்புற்றோருக்கு உதவி
நிதி தொடர்பில் கவலைப்படாது அனர்த்தங்களில் பாதிப்புற்று துன்புறும் மக்களின் இயல்பு வாழ்வை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இயற்கை அனர்த்தங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்தின் நிலைமை தொடர்பில் ஆராயும் விசேட மாவட்ட அபிவிருத்திக் கூட்டம் நேற்று(01) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கேகாலை நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கே ஜனாதிபதி மேற்படி உத்தரவைப் பிறப்பித்தார்.
மின்சாரம், வீடமைப்பு, வீடமைப்புக்கான காணிகளை தேர்ந்தெடுத்தல், குடிநீர், பாடசாலைகள். மருத்துவமனை உள்ளிட்ட சுகாதார செயற்பாடுகள், மக்களுக்கான வாழ்வாதாரம், காப்புறுதி, நஷ்டஈடு உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் நேற்றைய இக் கூட்டத்தில் ஆராயப்பட்டன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தற்போது வழங்கப்பட்டு வருவதாக அவர்கள் ஜனாதிபதிக்கு விளக்கினர். கட்டிடங்கள் பொது வசதிகள் மக்களின் வாழ்வாதாரத்துக்கான செயற்றிட்டங்களுக்குத் தேவைப்படும் நிதி தொடர்பில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்தினர்.
இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி;நிவாரணத்துக்கான நிதியை அரசாங்கம் வழங்கும். நிதி தொடர்பில் எவரும் கவலைப்படத் தேவையில்லை. அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு உயிர்களையும், உடமைகளையும் இழந்து துன்ப துயரங்களோடு வாழும் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவர அனைவரும் அர்ப்பணிப்புடன் துரிதமாக செயற்படுங்கள்.
சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் அதற்கான நிதியை பெற்றுக்கொடுப்பர்.
பாதிக்கப்பட்டு தற்காலிக நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களுக்கு நிரந்தரமான வீடுகளை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுங்கள். தேசிய கட்டட ஆய்வு நிறுவனத்தின் ஆய்வறிக்கையைப் பெற்றுக்கொண்டு பொருத்தமானதும் பாதுகாப்பானதுமான இடத்தில் வீடுகளை நிர்மாணிப்பது முக்கியமாகும்.
துறை சார்ந்த அனைத்து அமைச்சர்களும் ஒன்றிணைந்து குழுவொன்று அமைக்கப்பட்டு மேற்கொள்ள வேண்டிய செயற்திட்டங்கள் அதற்கு தொடர்புபடுத்த வேண்டிய நிறுவனங்கள், அதிகாரிகள் தொடர்பில் முடிவெடுப்பது அவசியம்.
வீடுகளுக்குப் பணம் வழங்க வேண்டாம். அதில் பயனில்லை. வீடமைப்பு அமைச்சர் மற்றும் தோட்ட வீடமைப்பு உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் ஆகியோர் இணைந்து இதற்கான குழுவொன்றை அமைத்து நிரந்தரமானதும் பாதுகாப்பானதுமான வீடுகளை மக்களுக்கு நிர்மாணித்து வழங்க வேண்டியது தொடர்பில் ஆராய்வது அவசியமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
இதன்போது நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் சஜித் பிரேமதாச, பழனி திகாம்பரம் ஆகியோருக்கு ஜனாதிபதி உரிய ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கினார்.
அனர்த்தங்களினால் மின்சாரத் துறைக்கான பாதிப்பு ஒரு கோடியே 19 இலட்சமாகும் என குறிப்பிட்ட அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய அனைத்து பிரதேசங்களுக்கும் மீண்டும் மின்சாரம் வழங்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு விளக்கினார். மேலும் மண்சரிவு அனர்த்தங்கள் இடம்பெறக்கூடிய பிரதேசங்கள் தொடர்பிலும் அவர் ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்தினார்.
மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் என்ற வகையில், பிரதி வாரமும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கேகாலையில் கூடி மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவது என்ற தீர்மானத்தை ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளியிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply