மாயமான ராணுவ விமானத்தை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏன்?
மாயமான விமானத்தை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏன்? என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படைத் தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு கடந்த 22-ந்தேதி புறப்பட்டுச் சென்ற ஏ.என்௩2 ரக ராணுவ விமானம் கிளம்பிய 16-வது நிமிடத்தில் திடீரென மாயமானது. அது, சென்னைக்கு அருகே வங்கக் கடல் பகுதியில் 150 நாட்டிக்கல் மைல் தொலைவில் விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதையடுத்து அந்த விமானத்தை தேடும் பணியில் 15-க்கும் அதிகமான போர்க்கப்பல்கள், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. நேற்று 10-வது நாளாக தேடும்பணி நீடித்தது. எனினும் விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
நவீன கப்பல்கள் மூலம் தேடுவது நடந்தாலும் வங்கக் கடலில் விமானத்தை தேடுவது பெரும் சவாலாக உள்ளது. இதற்கு காரணம் வங்கக்கடலுக்கு அடியில் குவிந்துள்ள கழிவுகள்தான் என்று தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, சேலம் அரசு பொறியியல் கல்லூரியின் ஆராய்ச்சி ஆலோசகரும், விஞ்ஞானியுமான டி.ஜெயபிரபு கூறியதாவது:-
கடலோர காவல் படைக்கு சொந்தமான ‘டார்னியர்’ ரக விமானம் கடந்த ஆண்டு காணாமல் போனபோது, ‘சீஸ்மிக்’ என்னும் தொழில்நுட்பத்துடன் கூடிய அதிர்வுகளை கொண்டு ‘காலம்’ என்ற எந்திரம் மூலம் துல்லியமாக விமானம் விழுந்த இடத்தை கண்டுபிடித்தோம்.
அதேபோல் தற்போது மாயமான ஏ.என்௩2 ரக போர் விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கடலோர பாதுகாப்பு படையிடம் சில குறிப்புகளை வழங்கி இருக்கிறோம்.
விமானம் மாயமான பகுதி 3,250 மீட்டர் முதல் 3,400 மீட்டர் வரை ஆழம் உள்ள கடல் பகுதியாகும். பொதுவாக ஆழம் அதிகமாக இருக்கும் கடல் பகுதியில் புவி ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கும். அதனால் வளிமண்டலத்தில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக விமானம் திசை மாறி சென்று விபத்துக்கு உள்ளாகி இருப்பது தெரியவருகிறது.
இந்தநிலையில் ஆந்திரா மாநில வனப்பகுதியில் மாயமான விமானம் விழுந்ததை பழங்குடியினர் பார்த்ததாக கூறப்பட்டது. ஆனால் இந்தப்பாதையில் உள்ள திருப்பதி, ஸ்ரீஹரிகோட்டா, ஐதராபாத் ஆகிய இடங்களில் உள்ள ரேடாரில் மாயமான விமானம் குறித்து எந்த தகவலும் பதிவாகவில்லை. சென்னை ரேடாரில் மட்டுமே பதிவாகி உள்ளது. இவற்றை வைத்து பார்க்கும்போது கடலில் விழுந்ததற்கான சாத்தியக்கூறுகள்தான் அதிகம்.
சமீப காலமாகவே தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களின் கழிவு நீர் வங்ககடலில் கலந்து வருகிறது. இதில், குப்பைகளுடன் களிமண்ணும் அதிகம் சேருகிறது. இவை குவிந்து கிடப்பதால் கடல் மாசு அடைந்து கடல் சீற்றம், கடலின் தன்மையில் மாற்றம் ஏற்படுகிறது.
கடலுக்கு அடியில் களிமண்ணில் சிக்கி இருக்கும் பொருட்களை கண்டுபிடிப்பதற்காக கடலுக்கு அடியில் அதிர்வுகளை அனுப்புகிறோம். அவ்வாறு அனுப்பும்போது அவற்றை கடலுக்கு அடியில் உள்ள கழிவுகள் தடுத்து விடுகின்றன. இதனால் விமானத்தின் பாகங்களை கண்டுப்பிடிப்பது சவாலாக மாறி வருவதுடன், குழப்பமான சூழ்நிலையையும் ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply