வில்பத்து வர்த்தமானியை ஜனாதிபதி உடனடியாக வாபஸ் பெறவேண்டும் : முஜிபுர் ரஹ்மான்
1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளினால் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் கருத்துக்களுக்கு செவிசாய்க்காது, வில்பத்து வனம் தொடர்பிலான வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டுள்ளார்.அவர் இனவாதிகளுக்கு சார்பாக ஒருதலைப்பட்சமாக செயற்பட்டிருக்கிறார். எனவே அவர் அதனை உடனடியாக வாபஸ்பெற வேண்டும் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, திட்டமிட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு முஸ்லிம்ளை மீள்குடியமர்த்தாமையினாலேயே இவ்வாறான பிரச்சினை தோன்றியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து முஜிபுர் ரஹ்மான் மேலும் குறிப்பிடுகையில்,
மறிச்சிக்கட்டி, மாவில்லு, வெப்பல், விளாத்திக்குளம், பெரியமுறிப்பு உள்ளடங்கிய பகுதிகள் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த பகுதிகளாகும். அதற்கான ஆவணங்கள் பலவும் அங்குள்ள மக்களிடம் இருக்கின்றன. இது குறித்து ஜனாதிபதி பரிசீலிக்காது தீர்மானம் எடுத்திருப்பதும் மிகவும் தவறானதாகும். அவர் கையொப்பமிட்ட வர்த்தமானி அறிவித்தலை வாபஸ்பெற வேண்டும்
முஸ்லிம்கள் வடக்கிலிருந்து விடுதலை புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 27 வருடங்களாகின்றன. அத்துடன் யுத்தம் நிறைவடைந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்தும் இந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கான எந்தவொரு திட்டத்தையும் மஹிந்த அரசாங்கமே இந்த நல்லாட்சி அரசாங்கமோ முன்வைக்கவில்லை.
முன்னாள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதி ஆணைக்குழு (எல்.எல்.ஆர்.சி) யின் அறிக்கையின் பிரகாரம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது சொந்த இடத்தில் மீள்குடியேற்றப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எல்.எல்.ஆர்.சி. அறிக்கையையும் மீறியிருக்கிறார்.
அவர் இனவாதிகள் தயாரித்து வழங்கிய திட்டத்தை அமுல்படுத்துவதற்கு எத்தனிக்கிறார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஜனாதிபதி இனவாதிகளை அழைத்து அவர்களுடன் ஜனாதிபதி மாளிகையில் கலந்துரையாடினார். ஆனால் 30 வருட யுத்ததால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண முஸ்லிம் மக்களுடன் எவ்வித கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவில்லை.
அவர்களின் கருத்துக்கள் தொடர்பில் ஆராய்வதற்கும் ஜனாதிபதி முயற்சிக்கவில்லை.
மாறாக, நாட்டில் இனவாதத்தை பரப்பி மற்றுமொரு யுத்தத்தை ஏற்படுத்த முயற்சித்த கடும்போக்குவாதிகளின் சதியில் ஜனாதிபதி சிக்கியுள்ளார். அவர்களின் திட்டத்திற்கு அடிபணிந்திருக்கிறார். இது இன்னுமொரு பாரிய பிரச்சினையையே தோற்றுவிக்கும்.
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் கருத்துக்கள் அறியப்பட வேண்டும். இப்பிரச்சினையை சுமுகமாகத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படவேண்டும். இதனை விஞ்ஞானபூர்வமாக தீர்க்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply