கிரிஷாந்த டி சில்வா ஜெனரலாக தரமுயர்வு

தற்போதைய இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (27) செவ்வாய்க்கிழமையிலிருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளதுடன் இதற்கமைய நான்கு நட்சத்திர ஜெனரலாக இதற்கு பின்னர் சேவையாற்றவுள்ளார். பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள இவர், நாளை முதல் புதிய கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி முதல் இலங்கை இராணுவத்தின் 21ஆவது தளபதியாக சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1980ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட இவர், ஒரு வருட கால பயிற்சிகளை முடித்துக் கொண்டு 1981ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் திகதி இராணுவ பொறியியல் படையணியின் இரண்டாவது லெப்டினன்ட்டாக வெளியேறியுள்ளார். சுமார் 37 வருடங்கள் இராணுவத்தில் சேவையாற்றி வரும் இவர், கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவராவார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply