எல்லை தாண்டி மீன் பிடித்தால் ரூ. 20 கோடி அபராதம்: இலங்கை அரசுக்கு, தமிழக மீனவர்கள் கடும் எதிர்ப்பு
எல்லை தாண்டி வந்து மீன் பிடித்தால் தமிழக மீனவர்களுக்கு ரூ. 2 கோடி முதல் ரூ. 20 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று இலங்கை பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.இதற்கு தமிழக மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து மீனவர் சங்கத்தலைவர் தேவதாஸ் கூறியதாவது:-
ராமேசுவரம் உள்பட தமிழக மீனவர்கள் பெரும் நஷ்டத்திலும், கஷ்டத்திலும் இருந்து வருகின்றனர். இலங்கை கடற்படையினரால் 150-க்கும் மேற்பட்ட படகுகள் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளன. 60-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் மற்றும் மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மேலும் இலங்கை கடற்படையினரின் தொல்லை இல்லாமல் மீன்பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளோம்.
இது சம்பந்தமாக தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதோடு கடமையை முடித்துக் கொள்கிறது. மத்திய அரசும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
இந்த நிலையில் இலங்கை பாராளுமன்றத்தில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இது தமிழக மீனவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்தி இந்த சட்டத்தை வாபஸ் பெறவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் மற்றும் மீனவர்களை விடுவிக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இனிமேலும் காலம் தாழ்த்தினால் தமிழகம் தழுவிய பொது மக்களை திரட்டி பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம். அரசு இதுவரை சந்திக்காத அளவு இந்த போராட்டம் இருக்கும். இதற்காக அனைத்து மீனவர் சங்க அமைப்புகளின் கூட்டத்தை கூட்டி முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply