புளூவேல் விளையாட்டால் தன்னை மறந்து தாண்டவமாடிய பாலிடெக்னிக் மாணவர்
புளூவேல் என்னும் உயிர்க்கொல்லி விளையாட்டுக்கு தடை விதித்திருந்தபோதிலும் அந்த விளையாட்டுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் உள்ளது. இந்த விளையாட்டால் மதுரை, புதுச்சேரி மாணவர்கள் விளையாடி தற்கொலை செய்து இறந்துள்ளனர். இந்த விளையாட்டில் இறங்கி மீள விரும்புவோருக்கு காவல் துறை உதவி வருகிறது. பல்வேறு கட்ட கவுன்சிலிங் கொடுக்கவும் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
இந்த நிலையில் துறையூர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவரும் இந்த விளையாட்டில் சிக்கி தன்னை மறந்த நிலையில் விபரீத செயல்களில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நாகலாபுரத்தை சேர்ந்தவர் பார்த்திபன் மகன் சந்திரன் (வயது 16), (தந்தை-மகன் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது). சந்திரன் துறையூர் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மெக்கானிக்கல் படித்து வருகிறார்.
10-ம் வகுப்பு படிக்கும் போதே பெற்றோருக்கு தெரியாமல் ஆன்டிராய்டு செல்போன் வாங்கிய மாணவர் சந்திரன் அதிலேயே முழ்கியுள்ளார். எப்போதும் தனிமையில் இருந்து வந்த அவர் பல்வேறு விளையாட்டுக்களில் அதிக கவனம் செலுத்தி வந்துள்ளார்.
இவர் கல்லூரியில் செல்போன் எடுத்து வர தடை விதிக்கப்பட்டிருந்தாலும் மறைத்து பயன்படுத்தி வந்துள்ளார். இதனை கண்டுபிடித்த கல்லூரி நிர்வாகத்தினர் மாணவரின் தந்தையை அழைத்து கண்டித்துள்ளனர். இதனால் கல்லூரிக்கு செல்ல மாட்டேன் என்று மாணவர் கூறி வந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை எழுந்து செல்போனில் சந்திரன் விளையாடி கொண்டிருந்தார். இதனை பார்த்த தந்தை அதிர்ச்சி அடைந்து மகனிடம் இருந்து செல்போனை பறித்து கீழே போட்டு உடைத்துள்ளார். இதில் செல்போன் சுக்குநூறாகி போனது. ஆத்திரம் அடைந்த சந்திரன் தந்தை என்று பார்க்காமல் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ந்து போன அவரது தந்தை மகனை தனி அறையில் அடைத்து பூட்டினார்.
அந்த அறைக்குள் அடைபட்ட சந்திரன் பலத்த சத்தத்துடன் கூக்குரலிட்டுள்ளார். அத்துடன் சுவற்றில் தனது தலையை மோதி காயப்படுத்தினார். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் மகன் நடப்பதாக பயந்த தந்தை இதுபற்றி பாலிடெக்னிக் நிர்வாகத்திற்கு தகவல் அளித்தார்.
பாலிடெக்னிக் தாளாளர் பிரதீப் இது குறித்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர் கணபதியிடம் ஆலோசனை செய்தார். பின்னர் சந்திரனை அவரது நண்பர்களை அழைத்து சென்று பேசி மீட்டு துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
ஆஸ்பத்திரியில் டாக்டர் பரிசோதனைக்கு சந்திரன் ஒத்துழைக்கவில்லை. தகவல் அறிந்த துறையூர் போலீசார் விசாரணை செய்த போதும் எதையும் கூற மறுத்துள்ளார். ஆகாஷ் தந்தை மற்றும் பாலிடெக்னிக் நிர்வாகம், மாணவர்களிடம் போலீசார் விசாரணை செய்தனர்.
அதில் எப்போதும் செல்போனுடன் இருக்கும் சந்திரன் புளூவேல் விளையாட்டை நண்பர்கள் சிலருடன் டவுன்லோடு செய்துள்ளார். கல்லூரிக்கு செல்போன் எடுத்துவர தடை விதித்ததால் கல்லூரி செல்ல மறுத்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து மாணவர் சந்திரன் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply