பிறந்தநாளையொட்டி தாயாரிடம் மோடி ஆசி பெற்றார் ஜனாதிபதி, ராகுல்காந்தி வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று 67–வது பிறந்த தினம் ஆகும். தனது பிறந்தநாளையொட்டி குஜராத் மாநிலம் காந்திநகரின் புறநகர் பகுதியில் உள்ள ரைசான் கிராமத்தில் தனது இளைய சகோதரர் பங்கஜ் மோடியுடன் வசிக்கும் தாயார் ஹீரா பென்னிடம் மோடி ஆசி பெறுவது வழக்கம். பிரதமர் பதவி ஏற்ற பிறகும் இந்த பழக்கத்தை அவர் தொடர்ந்து பின்பற்றி வருகிறார்.
இந்த நிலையில் 67–வது பிறந்த தினத்தையொட்டி மோடி நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஆமதாபாத் நகருக்கு சென்றார். அவரை மாநில பா.ஜனதா தலைவர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அதைத் தொடர்ந்து மோடி, இரவில் காந்தி நகரில் தங்கினார். பிறகு நேற்று அதிகாலை அங்கிருந்து ரைசான் கிராமத்தில் உள்ள சகோதரர் பங்கஜ் மோடியின் வீட்டுக்கு பலத்த பாதுகாப்புடன் காரில் சென்றார்.
தாயாரிடம் ஆசி
அங்கு அவருடைய தாயாரான 97 வயது ஹீராபென்னின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். அப்போது மகனுக்கு வாஞ்சையுடன் தாயார் இனிப்பு ஊட்டி மகிழ்ந்தார். இருவரும் 20 நிமிடம் மனம்விட்டு பேசினார்.
அதைத் தொடர்ந்து சகோதரர் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் ரைசான் கிராமத்தில் உள்ள குழந்தைகளுடன் அவர் சிறிது நேரம் கலந்துரையாடி மகிழ்ந்தார்.
ஜனாதிபதி, ராகுல் வாழ்த்து
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அவர் தனது வாழ்த்து செய்தியில், ‘‘பிரதமர் மோடிக்கு 67–வது பிறந்த நாள் வாழ்த்துகள். நீங்கள் நீண்ட ஆயுள் பெற்று இந்த நாட்டுக்கு சேவையாற்றிட வேண்டுகிறேன்’’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, மோடிக்கு டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்தார். அதில், ‘‘பிறந்ததினத்தை கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்’’ என்று கூறப்பட்டு இருந்தது.
பா.ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அருண்ஜெட்லி, பஞ்சாப் முன்னாள் முதல்–மந்திரி பிரகாஷ் சிங் பாதல், காஷ்மீர் முன்னாள் முதல்–மந்திரி உமர் அப்துல்லா, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply