கேரளாவில் புயல் மழை: 270 மீனவர்கள் மாயம்- கப்பல்படை தேடுதல் வேட்டை

கன்னியாகுமரி அருகே கடலில் உருவான புயல் திருவனந்தபுரம் அருகே 60 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இதனால் திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கொச்சி உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த புயல் காரணமாக 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் 4.2 மீட்டர் உயரத்திற்கு கடலில் அலைகள் எழும்பும் என்றும் கடலிலும் சூறாவளியுடன் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி கேரளாவில் கடலோர பகுதிகளில் இந்த புயலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

புயலை தொடர்ந்து கடலுக்கு சென்ற மீனவர்களை கரைக்கு திரும்பும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்ததால் ஆழ்கடலுக்கு சென்றிருந்த மீனவர்கள் கரை திரும்ப தொடங்கினார்கள்.

கேரள கடல் பகுதியில் இருந்து 28 விசைப்படகுகளில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 270 மீனவர்கள் இன்னும் கரைக்கு திரும்பவில்லை. இந்த தகவல் கிடைத்ததும் தேசிய பேரிடர் மீட்பு குழு, கப்பல் படை, கடலோர பாதுகாப்பு படை ஆகியவற்றை சேர்ந்தவர்கள் அந்த மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

திருவனந்தபுரம் நகரமும் புயல் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஏராளமான மரங்கள், மின்சார கம்பங்கள் சாய்ந்ததால் நகரின் பல பகுதிகள் இருளில் மூழ்கி உள்ளது. மழை காரணமாக இதுவரை 4 பேர் உயிர் இழந்து உள்ளனர்.

கேரள மந்திரிகள் கடகம்பள்ளி சுரேந்திரன், மெர்சிகுட்டி அம்மா, மற்றும் மீட்பு பணி குழுவினர் நிவாரண பணிகளை முடுக்கி விட்டு உள்ளனர். கேரள முதல்-மந்திரி பினராயிவிஜயன் உத்தரவின் பேரில் வெள்ள நிவாரண முகாம்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவில்- திருவனந்தபுரம் பாசஞ்சர், கோட்டயம்-எர்ணாகுளம் பாசஞ்சர், எர்ணாகுளம்- கோட்டயம் பாசஞ்சர், எர்ணாகுளம்-நிலம்பூர் பாசஞ்சர், நிலம்பூர்- எர்ணாகுளம் பாசஞ்சர், புனலூர்-பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ், பாலக்காடு-புனலூர் பாலருவி எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இதே போல கோட்டயம்- கொல்லம் பாசஞ்சர், கொல்லம்-புனலூர் பாசஞ்சர், புனலூர்-கொல்லம் பாசஞ்சர், கொல்லம்- திருவனந்தபுரம் பாசஞ்சர், திருவனந்தபுரம்- நாகர்கோவில் பாசஞ்சர், புனலூர்-கன்னியாகுமரி பாசஞ்சர் ஆகிய ரெயில்கள் நாளை இயங்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply