பெரியார் சிலை உடைப்பு-லெனின் சிலை அகற்றப்பட்டதற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்

திரிபுரா மாநிலத்தில் உள்ள மெலோனியா நகரில் 2 நாட்களுக்கு முன்பு, முந்தைய சோவியத் ரஷியாவின் மறைந்த பிரபல தலைவர் விளாடிமீர் லெனின் சிலை திடீரென அகற்றப்பட்டது. அண்மையில் நடந்த மாநில சட்டசபை தேர்தலில் 25 ஆண்டு கால மார்க்சிஸ்ட் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்ததால் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்ட பா.ஜனதா தொண்டர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் லெனின் சிலையை அகற்றியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் பற்றிய பரபரப்பு அடங்குவதற்குள் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நேற்று முன்தினம் இரவு தந்தை பெரியாரின் சிலை உடைக்கப்பட்டது. இதனால் தலைவர்களின் சிலை உடைப்பு விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்றத்திலும் இப்பிரச்சினை நேற்று எதிரொலித்தது.

இந்த நிலையில் பிரதமர் மோடி பிரபல தலைவர்களின் சிலை உடைப்புக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்தார். ‘நாட்டின் சில பகுதிகளில் சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதுபோன்ற செயல்களை ஒருபோதும் தம்மால் ஏற்க முடியாது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக மோடி மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை தொடர்பு கொண்டு பேசினார் என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையடுத்து, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நேற்று எச்சரிக்கை அறிவுறுத்தல் அவசர கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டது.

அதில், “சிலைகளை சேதப்படுத்தும் செயல்கள் நாட்டின் சில பகுதிகளில் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதுபோல் சிலைகளை சேதப்படுத்துவோர் மீது சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இனியும் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் தீவிர ரோந்து மேற்கொள்வதுடன் சிலைகளை உடைக்கும்படி தூண்டிவிடுவோர் மீது சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகளின்படி தக்க நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும். சமூக விரோத சக்திகளை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது.

பெரியார் மற்றும் லெனின் சிலை உடைப்புக்கு பா.ஜனதா தலைவர் அமித்ஷா கண்டனம் தெரிவித்தார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறுகையில், “அண்மையில் நடந்துள்ள சிலைகள் மீதான தாக்குதல் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. எந்த தலைவருடைய சிலையும் சேதப்படுத்தப்படுவதை பா.ஜனதா ஒருபோதும் ஆதரிக்காது. பா.ஜனதாவை பொறுத்தவரை நாட்டில் பல்வேறு வித சிந்தனைகளும், சித்தாந்தங்களும் சேர்ந்தே இருக்கவேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளது. இந்தியா பன்முகத்தன்மை கொண்டது. எனவே விரிவான விவாதங்களின் வாயிலாக உணர்வை வெளிப்படுத்துவதே நமக்கு பலம் சேர்க்கும். அந்த வழியிலேயே திறந்த சிந்தனைகள் மற்றும் கட்டமைப்பு அரசியல் மூலம் ஆக்கப்பூர்வமான புதிய இந்தியாவை உருவாக்குவதில் பா.ஜனதா உறுதி கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

சிலை உடைப்பு விவகாரம் குறித்து அமித்ஷா தமிழக மற்றும் திரிபுரா மாநில பா.ஜனதா தலைவர்களை தொடர்பு கொண்டும் பேசினார்.

பெரியார், லெனின் சிலைகள் உடைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதுபற்றி அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரஞ்சித் சுர்ஜேவாலா சமூக ஊடகத்தில் பதிவு செய்த குறிப்பில், “தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது அறுவருக்கத்தக்க மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும். பா.ஜனதா தலைவர்களிடம் ஏழைகள், தலித்துகள், பெண்களுக்கு எதிராக தவறான சிந்தனைகள் ஆழமாக வேரூன்றி இருப்பதை இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் வெளிப்படுத்துகின்றன. எச்.ராஜா பெரியாரைப் பற்றி அவதூறாக பேசி அவருடைய சிலையை அடித்து நொறுக்கும்படி கூறியிருக்கிறார். அதன் காரணமாகவே வேலூர் மாவட்ட பா.ஜனதா தலைவர்கள் பெரியாரின் சிலையை உடைத்து இருக்கின்றனர்” என்று தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், முதல் எச்சரிக்கை அறிவுறுத்தல் அவசர கடிதத்தை மாநில அரசுகளுக்கு அனுப்பிய அடுத்த சில மணி நேரங்களில் 2-வதாக மற்றொரு கடிதத்தையும் மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இதுபோன்ற சிலைகள், சேதப்படுத்தும் சம்பவங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட தலைமை போலீஸ் அதிகாரி தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.

மாவட்ட கலெக்டர்களும், மாவட்ட தலைமை போலீஸ் அதிகாரிகளும் தங்களது அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதிக்குள் சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதை மாநில அரசுகள் உறுதி செய்யவேண்டும். மேலும் நிலைமையை மிகவும் உன்னிப்பாக கவனித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது கைது போன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது வழக்கும் தொடரவேண்டும்.

இதேபோல் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சமூக விரோத சக்திகள், சமூக ஊடகங்கள் மூலம் வதந்திகளை பரப்புவோர், வன்முறையில் ஈடுபடுவோர் மற்றும் வன்முறையை தூண்டிவிடுவோரை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுப்பதையும் உறுதி செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், “இதுவரை எந்த மாநில அரசும் சிலை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக கூடுதல் துணை ராணுவ வீரர்களை கேட்கவில்லை” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply