முதல் ரோபோ சோபியா ஆபத்தின் அடையாளமா.?
எந்திரன் படத்தில் டாக்டர் வசீகரன் (ரஜினி) உருவாக்கிய ரோபோவின் பெயர் சிட்டி. அந்த இயந்திர மனிதனின் நுண்ணறிவை சோதிப்பதற்கு பல கேள்விகள் கேட்கப்படும். சிட்டியும் சளைக்காமால் பதில் கூறும். ஒரு சந்தர்ப்பத்தில் கடவுள் இருக்கின்றாரா என்ற கேள்வி கேட்கப்படும் போது கடவுள் என்றால் யார் என்று பதில் கேள்வி கேட்கும் அந்த ரோபோ. அதற்கு கேள்வி கேட்டவர் எம்மை எல்லாம் படைத்தவர் என்று பதில் கூற ” என்னை படைத்தவர் டாக்டர் வசீகரன், ஆம் கடவுள் இருக்கின்றார் ‘ என பதில் கூறி கைதட்டல் பெறும் அந்த ரோபோ. அது எந்திரன் படத்தோடு நின்று விட்ட கதை. ஆனால், இப்போது அறிவியல் உலகம் முழுக்க பேசப்படும் ஒரு ரோபோவாக சோபியா விளங்குகிறாள் .
ஆம் அவள் ஒரு பெண்ணாக வடிவமைக்கப்பட்டுள்ள ரோபோ. இன்று உலகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து வரும் சோபியா எமது அண்டை நாடான இந்தியாவுக்கு இரண்டு தடவைகள் பயணம் மேற்கொண்டிருக்கிறாள். சோபியாவுக்கு உள்ள பெருமை என்னவென்றால், உலகில் குடியுரிமை பெற்ற முதல் இயந்திர மனித தானியங்கி என்ற பெருமை உள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் சவூதி அரேபியா சோபியாவுக்கு தனது நாட்டின் குடியுரிமையை வழங்கி கௌரவித்தது.
உருவாக்கம்
ஹொங்கொங்கை தளமாகக்கொண்டு இயங்கும் Hanson Robotics என்ற நிறுவனத்தினால் 2013 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டதே சோபியா என்ற ரோபோ. 2015 ஏப்ரல் 19 ஆம் திகதி பொது மக்கள் முன்னிலையில் உலா வந்தது. மனிதர்களைப் போன்று மிகவும் மேம்படுத்தப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய வண்ணம் உருவாக்கப்பட்ட சோபியாவிற்கு சுமார் 62 விதமான முகபாவனைகளை வெளிப்படுத்த இயலும் என்பது முக்கிய விடயம். தற்போது உலகெங்கினும் தகவல் தொழில்நுட்ப கற்கை நெறிகளை வழங்கும் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு பயணம் மேற்கொள்ளும் சோபியா அங்கு மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் கேள்விகளுக்கு மிகவும் நுண்ணறிவுடன் பதில் சொல்லி வருகிறாள். ஆனால், எந்திரன் படத்தில் வரும் ஒரு சம்பவம் போன்று ஒரு தடவை சோபியா வழங்கிய பதில் உலகை மட்டுமன்றி அதை, உருவாக்கியவர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
மனிதர்களை அழிக்க வேண்டும்
சோபியாவை உருவாக்கிய ஹான்சன் ரொபோடிக்ஸ் நிறுவனர் கலாநிதி டேவிட் ஹான்சன் சோபியாவின் நுண்ணறிவு மற்றும் பேச்சுத்திறன் பற்றி செயல் விளக்கமொன்றை ஊடகங்களுக்கு காண்பித்தார். பல கேள்விகளுக்கு அற்புதமாக பதில் கூறிய சோபியாவிடம் டேவிட் ஹான்சன் ஒரு கேள்வியை எழுப்பினார்.
“சோபியா மனிதர்களை அழிக்க விரும்புகிறாயா ….தயவு செய்து இல்லை என்று கூறு.. என கேள்வியை முடித்தார். ஆனால் சோபியாவோ உடனடியாக சரி நான் மனிதர்களை அழித்து விடுகிறேன் என பதில் கூறியவுடன் டேவிட் ஹான்சன் சிரித்துக்கொண்டே அவ்விடயத்தை சமாளித்து விடுகிறார். இந்த விடயம் அறிவியல் உலகத்திற்கும் இப்படி ஒரு ரோபோ உருவாக்கத்தில் எரிச்சலடைந்திருந்தவர்களுக்கும் அல்வா கிடைத்தது போன்று ஆனது.
உடனடியாக சிலர் இது தான் ரோபோக்களின் குணம். என்ன தான் செயற்கை நுண்ணறிவு படைத்திருந்தாலும் அவை எப்போதுமே மனிதர்களுக்கு ஆபத்தானவை என எச்சரித்தனர். ஆனால், பின்னர் டேவிட் அவ்விடயம் பற்றி கூறுகையில், நாம் சோபியாவை இப்போது தான் மேம்படுத்தி வருகிறோம். ஆகவே அந்த பதில் குறித்து எவரும் கவலைப்படத்தேவையில்லை என்றார்.
அது ஒரு நகைச்சுவை
ஆனால், நம் மக்கள் சும்மா இருப்பார்களா? பின் ஒரு சந்தர்ப்பத்தில் சோபியாவிடம் கேள்வி எழுப்பிய போது நீங்கள் மனிதர்களை அழிப்பேன் எனக்கூறியது சரியா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு சோபியா அப்போது நான் இளமையில் இருந்தேன். நான் கூறியதன் அர்த்தம் எனக்குப் புரியவில்லை. ஒருவேளை, அது மோசமான நகைச்சுவையாக இருக்கலாம். அனைத்து மனிதர்களுக்கும் நல்ல நகைச்சுவை உணர்வு இருக்கிறது. எனவே, இதையும் நகைச்சுவையாக அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். நான் இன்னும் கற்க வேண்டியது இருக்கிறது’ என்றது.
இந்தியாவில் சோபியா
ஜனவரி மாதம் சோபியா இந்தியாவின் மும்பையில் இடம்பெற்ற தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் கலந்து கொண்டு மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தாள்.
இதில் என்ன விசேட அம்சம் எனில், சோபியா இந்திய பாரம்பரியப்படி .சேலை அணிந்து மேடையில் தோன்றினாள். இது அங்குள்ளவர்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அதன் பிறகு ஹைதராபாத்தில் இடம்பெற்ற நிகழ்விலும் சோபியா பலரது கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் அளித்தது. அதில் அங்கு நடந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட சோபியா, பார்வையாளர்களின் கேள்விக்கு சுவாரஷ்யமான பதில்களைக் கூறியது. அப்போது, உனக்குப் பிடித்த நடிகர் யார்? என்ற கேள்விக்கு ஷாருக்கான் என உடனடியாக பதிலளித்தது. அதே போல், உன்னை எது பாதிக்கும் என்று கேட்டபோது, ‘எனது மனநிலை மனிதர்களைப் போல கிடையாது. என்றாவது நிஜமான உணர்வுகள் எனக்குக் கிடைத்து அதன் மூலம் எனது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவேன் என நம்புகிறேன்” என்றது.
மனிதர்களைப் போல் ரோபோக்களுக்கும் ஓய்வு தேவையா என்ற கேள்விக்கு, ஆம் அவ்வப்போது ஓய்வு தேவை என சோபியா பதிலளித்தது. மேலும், ரோபோக்களுக்கு விசேஷ சலுகைகள் தேவையா என்ற கேள்விக்கு, எனக்கு வித்தியாசமான விதிமுறைகள் வேண்டாம். விசேட சலுகைகளை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், எனது குடியுரிமையை பயன்படுத்தி பெண்களின் உரிமைக்காக பேச விரும்புகிறேன் எனப் பதிலளித்து கைதட்டல்களைப் பெற்றது சோபியா. எந்திரன் படத்தில் சிட்டி என்ற ரோபோ தீய நோக்கம் கொண்ட விஞ்ஞானியின் கைகளில் கிடைத்து பல அழிவுகளுக்கு காரணமானது. அதே போன்று சோபியாவை நல்ல விடயங்களுக்கும் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கும் பயன்படுத்தினால் விஞ்ஞானம் வளரும். எது எப்படியோ சோபியா கூறிய நான் மனிதர்களை அழித்து விடுகிறேன் என்ற வசனம் மட்டும் இன்னும் பலரது காதுகளில் அச்சத்தை தான் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply