ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உதவியின்றி எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க முடியாது

உள்ளூராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடைத்த வாக்குகளுடன் ஒப்பிடுகின்ற போது எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உதவியின்றி ஆட்சியமைக்க முடியாது என்று தெரிவித்த ஜனாதிபதி, இந்த பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எதிர்காலத்தில் தெளிவான வெற்றியை நோக்கி முன்னெடுத்துச் செல்வதாக தெரிவித்தார்.

கடந்த உள்ளூராட்சி தேர்தலின்போது பொலன்நறுவை மாவட்ட உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்வு நேற்று (26) பொலன்நறுவை ரோயல் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

வெற்றி குறித்து உற்சாகத்தில் யார் எப்படி நடந்துகொண்டாலும் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்ட எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அளிக்கப்பட்ட வாக்குகளில், 40 வீதத்திற்கு அதிகமாக பெற்றுக்கொள்ள முடியவில்லை என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்த தேர்தல் பாராளுமன்ற தேர்தலாக இருந்திருப்பின் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான பலம் கிடைத்திருக்காது என்பது அறிக்கைகளின் மூலம் தெரியவந்திருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடைத்த வாக்குகளுடன் ஒப்பிடுகின்ற போது எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உதவியின்றி ஆட்சியமைக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

இந்த தேர்தல் பெறுபேறுகள் குறித்து எவரும் குழப்பமடையவோ, குதூகலிக்கவோ தேவையில்லை என்றும், இந்த பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எதிர்காலத்தில் தெளிவான வெற்றியை நோக்கி முன்னெடுத்துச் செல்வதாக வும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எவ்வித குறையுமின்றி மேற்கொள்ள கட்சி தலைவர் என்றவகையில் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

சிறந்த அரசியல் கலாசாரத்திற்கான ஒழுக்கப் பண்பாடுகளுடன் புதிய உறுப்பினர்கள் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, தமது பொறுப்புக்களை மக்களுக்காக உரிய முறையில் நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக் காட்டினார்.

தமன்கடுவ நகர சபை, தமன்கடுவ பிரதேச சபை, திம்புலாகலை பிரதேச சபை, வெலிகந்த பிரதேச சபை, ஹிங்குராங்கொடை பிரதேச சபை, லங்காபுர பிரதேச சபை, மெதிரிகிரிய பிரதேச சபை மற்றும் எலஹர பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இதன்போது பதவிப்பிரமாணம் செய்தனர்.

புதிய உறுப்பினர்களுக்கு ‘மகாத்மா காந்தி’ என்ற நூலும் நெல்சன் மண்டேலாவின் சுயசரிதை தொடர்பான நூலும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன.

பிரதேச அரசியல் பிரதிநிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply