தகாத உறவு குற்றம் அல்ல : உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
திருமணம் ஆன ஆண்-பெண் இடையேயான கள்ள உறவில் ஆணுக்கு மட்டும் தண்டனை விதிக்க வகை செய்யும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 497-வது பிரிவுக்கு எதிராக ஜோசப் ஷைன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த சட்டப்பிரிவை செல்லாது என்று அறிவிக்கவேண்டும் என்றும் அவர் மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வந்தது. கடந்த மாதம் 8-ம் தேதியுடன் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் தகாத உறவு குற்றம் அல்ல என மெஜாரிட்டி நீதிபதிகள் தீர்ப்பு கூறியுள்ளனர்.
‘திருமணத்தை தாண்டிய தகாத உறவு குற்றம் அல்ல. மனைவிக்கு கணவர் எஜமானர் அல்ல. திருமணத்தை தாண்டி தகாத உறவில் ஈடுபடும் ஆண்களை மட்டுமே தண்டிக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 497-வது பிரிவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது’ என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
தகாத உறவில் ஈடுபடும் ஆண், பெண் இருவரையும் தண்டிக்க முடியாது. பாலியல் உறவு என்பது இருவரின் தேர்வு. தகாத உறவால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாத வரை அது கிரிமினல் குற்றம் இல்லை என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply