இலங்கை தேர்தல் முடிவு: வெற்றி பெற்றதாக அறிவித்தார் கோட்டாபய, ஒப்புக்கொண்டார் சஜித்

இலங்கை ஜனாதிபதி தேர்தல் சனிக்கிழமை முடிந்து உடனே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இரவு முழுவதும் தொடர்ந்த வாக்கு எண்ணிக்கையின் இறுதி முடிவுகள் இன்னும் முறைப்படி அறிவிக்கப்படவில்லை. எனினும், மொத்தம் பதிவான வாக்குகளில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் மூலம் மட்டுமே கோட்டாபய ராஜபக்ஷ 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

இதனடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபாய தாம் வெற்றி பெற்றதாக அறிவித்தார். தமது தோல்வியை ஒப்புக் கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரும், இரண்டாமிடம் பெற்றவருமான சஜித் பிரேமதாச அறிவித்தார்.

எனினும், தமிழர்கள்- முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் பெருவாரியான வாக்குகள் முன்னிலை பெற்றார் சஜித் பிரேமதாச.

சஜித் அறிக்கை

இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக அவரை எதிர்த்து போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ தெரிவிக்கிறார்.

விசேட அறிக்கையொன்றின் ஊடாகவே சஜித் பிரேமதாஸ இந்த வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

தான் ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக எதிர்கொண்ட தோல்வியை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து விலக எண்ணியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தனக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் தான் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது 26 வருட அரசியல் வாழ்க்கையில் தன்னுடன் பயணித்த ஆதரவாளர்களுக்கும் சஜித் பிரேமதாஸ இதன்போது நன்றியை தெரிவித்துள்ளார்.

சுதந்திரமாகவும், நீதியானதுமான தேர்தலை நடத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தேர்தல் ஆணைக்குழுவிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தனது எதிர்கால அரசியல் பயணம் தொடர்பில் தான் விரைவில் மக்களுக்கு தெளிவூட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.
“அமைதியாக கொண்டாட்டம்”

தான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதாகவும், வெற்றியை அமைதியான முறையில் கொண்டாட வேண்டும் என்றும் கோட்டாபய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply