இந்தியாவுக்கு தடுப்பூசி மூலப்பொருளை ஏற்றுமதி செய்ய முடியாது : தடையை நீக்க அமெரிக்கா மறுப்பு

இந்தியாவில் கொரோனா 2-வது அலை ஏற்பட்டு வேகமாக பரவி வருகிறது. தினமும் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கிடையே இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தடுப்பூசி மருந்துகளை தயாரிப்பதை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய மறுத்து வருகின்றன.

அமெரிக்காவில் அனைவருக்கும் ஜூலை 14-ந் தேதிக்குள் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு தடுப்பு மருந்து தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு தேவைப்படும் தடுப்பு மருந்து மூலப் பொருட்களை வினியோகிக்கும் நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு மட்டுமே கொடுத்து வருகின்றன.

பாதுகாப்பு உற்பத்தி சட்டத்தின்படி, உள்நாட்டு பயன் பாட்டுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறுவதால் தடுப்பு மருந்து மூலப்பொருட்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்க நிறுவனங்கள் மறுக்கின்றன.

இதனால் இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. இதுகுறித்து அமெரிக்க அரசின் கவனத்துக்கு இந்தியா கொண்டு சென்றது. இது தொடர்பாக ஜோபைடன் நிர்வாகம் தரப்பில் கூறும் போது, இந்தியாவின் மருந்து தேவையை அமெரிக்கா உணர்ந்துள்ளது.

இந்த பிரச்சினை உரிய முறையில் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த நிலையில் இந்தியாவுக்கு தடுப்பு மருந்து மூலப் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியதாவது:-

அமெரிக்கா தற்போது முதன்மையான ஒரு லட்சிய மற்றும் பயனுள்ள செயலில் ஈடுபட்டுள்ளது. அது அமெரிக்க மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான வெற்றிகரமான முயற்சி.

அந்த பணி நன்றாக நடந்து வருகிறது. மற்ற நாடுகளைவிட அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகம். 5.50 லட்சம் பேர் இறந்துள்ளனர். கோடிக் கணக்கானோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி தேவையை கருத்தில் கொண்டு ராணுவ தயாரிப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதன்படி உள்நாட்டு நிறுவனங்கள் தடுப்பு மருந்துக்கான மூலப்பொருட்களை முதலில் அமெரிக்க நிறுவனங்களுக்கு தான் வழங்க முடியும். அதை ஏற்றுமதி செய்ய முடியாது. உள்நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யும் கடமை அமெரிக்க அரசுக்கு உள்ளது.

அமெரிக்க மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் அவர்கள் மூலம் மற்ற நாடுகளுக்கு கொரோனா பரவாது. இது உலக மக்களை காக்கும் ஒரு நடவடிக்கை என்று கூறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply