வரவு செலவுத் திட்ட யோசனைப்படி 30,000 பட்டதாரிகளை அரச துறையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை : சந்தன அபேரத்ன
வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளின் பிரகாரம் 30,000 பட்டதாரிகள் அரசாங்க சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவர் என பொது நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
பட்டதாரிகளை அரசாங்க துறையில் இணைத்துக் கொள்வதற்காக இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அரச துறையில் அரசியல் ரீதியான ஆதரவாளர்களை நிரப்புவதற்கு பதிலாக அரசியல் அழுத்தங்கள் எதுவும் இன்றி திறமைகள், தகைமைகளின் அடிப்படையில் பொருத்தமானவர்களை இணைத்துக் கொள்வதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும்.
அரச சேவையில் பல்வேறு பிரிவுகளிலும் மீளாய்வுகளை மேற்கொண்டு அத்தியாவசிய ஆட்சேர்ப்புக்களை மட்டுமே மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலதிகமான ஊழியர்கள் சேவைகளின் அவசியத்தை அடிப்படையாகக் கொண்டு இடமாற்றம் செய்யப்படுவதுடன் உச்ச அளவு பலன்களை பெற்றுக் கொள்ளும் வகையில் சேவைகளை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.அதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவின் பரிந்துரையின் படி தாதி உத்தியோகத்தர்கள் 3147 பேர் நியமிக்கப்படவுள்ளனர் அதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது.
அதேபோன்று தற்போதைய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதன் பின்னர் அரசாங்க சேவையில் 18 ஆயிரத்து 853 பேரை இணைத்துக் கொள்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதுடன் அதில் 32 பேர் மட்டுப்படுத்த அடிப்படையில் அரசாங்க சேவைக்குள் மேற்கொள்ளப்படும் நியமனங்களாகும்.
அதன்படி இந்த காலகட்டத்தில் அரசாங்க சேவையில் இணைத்துக் கொள்வதற்காக 18,551 பேருக்கான அனுமதி மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply