சுமார் 5 கோடி 50 இலட்சம் ரூபா பெறுமதிமிக்க கேரள கஞ்சாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது

மீன்களை ஏற்றிச் சென்ற லொறியில் 5 கோடி 50 இலட்சம் ரூபா மதிப்புள்ள கேரள கஞ்சாவை மறைத்து கடத்தி சென்ற சந்தேகநபர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு துன்கல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிடிபன லெல்லம பகுதியில் வியாழக்கிழமை (9) கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, பொலிஸாருடன் இணைந்து விசேட சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போது லொறி ஒன்றிலிருந்து பெருமளவான கேரள கஞ்சா அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான லொறியை வழிமறித்து, சோதனையிட்ட போது மீன்களை ஏற்றிச் செல்வது போல சூட்சுமமான முறையில் கஞ்சாவை மறைத்து கடத்த முற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்தின் பேரில் லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 91 கஞ்சா பொதிகளில் இருந்து 200 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் சந்தைப் பெறுமதி சுமார் 5 கோடி 50 இலட்சம் ரூபா என பொலிஸாரால் மதிப்பிடப்பட்டுள்ளது. மன்னார் பகுதியை சேர்ந்த 35 மற்றும் 42 வயதுடைய சந்தேகநபர்கள் இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த கஞ்சா மீனவப்படகு மூலம் கடல் மார்க்கமாக வெளிநாடுக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கம்பஹா பமுனுகம பகுதியிலிருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து தெரியவந்துள்ளது. மேலும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பில் துன்கல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply