எனது தந்தையை நான் பார்த்துக்கொள்வேன் , இவ்விடயம் பற்றி அரசாங்கம் இனி பேசுவது பயனற்றது : நாமல் ராஜபக்ஷ
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மாத்திரம் இலக்குப்படுத்தி ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது. எனது தந்தையை நான் பார்த்துக்கொள்வேன். இவ்விடயம் பற்றி அரசாங்கம் இனி பேசுவது பயனற்றது. முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்கியதால் மிகுதியான நிதியை கொண்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை அரசாங்கம் குறைக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (15) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மாத்திரம் இலக்காக் கொண்டு ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்கப்பட்டன. ஏனைய முன்னாள் ஜனாதிபதிகள் எவரும் அரசாங்கத்துக்கு சவாலாக இருக்கவில்லை. அவர்கள் அரசாங்கத்துடன் இணக்கமாகவே செயற்பட்டார்கள்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரத்தில் இல்லாவிடினும் மக்கள் மனதில் உறுதியாகவுள்ளார். செயற்பாட்டு ரீதியிலான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் தொடச்சியான சந்திப்புக்களில் ஈடுபட்டார். மஹிந்த ராஜபக்ஷ தமக்கு பாரிய சவாலாக அமைந்து விடுவாரோ என்ற அச்சத்தில் தான் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
எமது தந்தையை எம்மால் பார்த்துக்கொள்ள முடியும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். அதன் அச்சுறுத்தல் அவருக்கு இன்றும் உள்ளது. மக்கள் விடுதலை முன்னணியை போன்று எம்மிடம் ஆயுதப்படை இல்லை. ஆகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பில் நாங்கள் விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.
எனது தந்தையை நான் பார்த்துக்கொள்வேன். இவ்விடயம் பற்றி அரசாங்கம் இனி பேசுவது பயற்றது. முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்கியதால் மிகுதியான நிதியை கொண்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை அரசாங்கம் குறைக்க வேண்டும். அரசியல்வாதிகள் தொடர்பில் மக்கள் மத்தியில் தவறானதொரு நிலைப்பாட்டை ஏற்படுத்தியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அதன் பெறுபேறு அரசாங்கத்துக்கு நிச்சயம் கிடைக்கும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply