பேரழிவுகர தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல்

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உலகத் தலைவர்கள் போர் நிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்த போதிலும், இஸ்ரேல் காசாவில் பலஸ்தீனியர்கள் மீதான பேரழிவுகரமான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

இடைவிடாத தாக்குதல்களை இஸ்ரேல் முன்னெடுத்து வரும் நிலையில், காசாவில் உள்ள நுசீராத் அகதிகள் முகாமில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு தங்குமிடம் அளித்த அரங்கத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏழு பெண்கள், இரண்டு சிறுவர்கள் உட்பட குறைந்தது 12 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அதேவேளை, அல் ஹம்லி மைதானத்தில் தற்காலிகமாகத் தங்கியிருந்த பலஸ்தீன அகதிகள் மீதும் நேற்று முன்தினம் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ன. இதன்படி நேற்று முன்தினம் இரவு வரையும் காசாவில் குறைந்தது 85 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை நேற்று அதிகாலை முதல் மத்திய மற்றும் தெற்கு காசாவில் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல்களில் குறைந்தது 30 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களது குடும்ப வீடு அழிக்கப்பட்ட பின்னர் இறந்த 11 பேரில் குழந்தைகளும் அடங்குவர் என்று காசா மருத்துவ தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேலிய இராணுவத் தளபதி இயல் ஜமீர், பலஸ்தீனியர்கள் அவர்களது பாதுகாப்புக்காக தெற்கு நோக்கி அனுப்பப்படுவதாகக் கூறியுள்ளார். இக்கூற்றை ஐ.நா. புலனாய்வாளர்கள் நிராகரித்துள்ளனர். காசா மீது நிரந்தர கட்டுப்பாட்டை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டவை இஸ்ரேலின் நடவடிக்கைகள் என்றும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் இஸ்ரேல் யூத பெரும்பான்மையை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை காசா அரச அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், காசா முழுவதும் இலட்சக்கணக்கான பலஸ்தீனியர்கள் இஸ்ரேலால் மீண்டும் வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்யப்பட்டுள்ளனர். இதனால், மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களிலும், குறிப்பாக அல்-மவாசி பகுதியும் இடம்பெயர்ந்தவர்களால் நிரம்பியுள்ளதாகவும், இடம்பெயர்ந்த மக்களை உள்வாங்குவதற்கு காலியான அல்லது பாதுகாப்பான இடங்கள் இங்கு எதுவும் இல்லை. கண்ணியமான வாழ்க்கைக்கான குறைந்தபட்சத் தேவைகள் இல்லாத சூழ்நிலையில் பாதுகாப்பற்ற வீதிகளின் ஓரங்களில் தற்காலிக கூடாரங்கள் உருவாகியுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காசா ஊடக அலுவலகம் குறிப்பிடுகையில், நன்கொடையாக வழங்கப்படும் கூடாரங்கள் காசாவிற்குள் நுழைவதைக் கூட இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்து தடுப்பதாகவும், சந்தைகளில் மீதமுள்ள சில பொருட்கள் மிகவும் விலை உயர்ந்தவை என்றும், மோசமான வானிலையிலிருந்து பலருக்கு எந்த வகையான தங்குமிடமும் இல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை இஸ்ரேலின் காசாவுக்கான கடல் முற்றுகையைத் தகர்த்து அங்குள்ள பலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கவென பொருட்களை எடுத்தும் செல்லும் ‘குளோபல் சுமுட் புளோட்டிலா’ படகுகள் கப்பல்களுக்கும் அவற்றில் பயணிக்கும் தொண்டர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கவென இத்தாலியும் ஸ்பெய்னும் இரண்டு போர்க்கப்பல்களை அனுப்பி வைத்துள்ளன.

இக்கப்பல்கள் மீது கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ட்ரோன் தாக்குதல் முன்னெடுக்கப்பட்ட பின்புலத்தில் இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

என்றாலும் அடுத்த 48 மணித்தியாலயங்களுக்குள் புளோட்டிலா படகுகள் மீது வன்முறைத் தாக்குதல்களை இஸ்ரேல் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அந்த தாக்குதல்கள் படகுகளைத் தகர்க்கவோ அல்லது உயிரிழப்புகளை ஏற்படுத்தவோ கூடிய நோக்கம் கொண்டவையாக இருக்க முடியும்.

அதனால் புளோட்டிலாவின் பயணத்திற்கு பாதுகாப்பான பாதையை உறுதி செய்ய அரசாங்கங்களும் சர்வதேச அமைப்புகளும் தலையிட வேண்டும் என்று புளோட்டிலா ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply