போதைப்பொருள் பாவனை சமுதாயத்துக்கு சவால்
இஸ்லாம் மானிடரை ஆரோக்கியம் உள்ள மனிதர்களாக வாழ்வதையே விரும்புகிறது. இதற்காக மனித உடம்பை திடகாத்திரமாகவும் பிணிகள் ஏற்படாத வகையிலும் பேணவும் வழிமுறைகளை காட்டித் தந்துள்ளது. அதை பின்பற்றுவதே சிறந்தது. இதற்கு மாறாக இன்று உடல் நலத்துக்கு கேடு விளைவிக்க கூடிய போதைப் பொருள் பாவனை சமுதாயத்துக்கு சவாலாக உள்ளது.
இன்றைய தலைமுறையினரே சமுதாயத்தின் நாளைய தலைவர்கள். அவர்களின் வளர்ப்பும்,வாழ்வும் பசுமையாக,செழிப்பாக இருந்தால் தான் நாடும்,வீடும் நலன் பெறும்.ஆனால் அதற்கு மாற்றமாக மனித சமுதாயத்தை அழிக்கும் ஓர் உயிர் கொள்ளி நோயாக போதைப் பொருள் பாவனை முழு உலகத்தையுமே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.மூலை முடுக்கெல்லாம் அதன் பாவனை மலிந்து கிடக்கிறது. போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கையின் வளர்ச்சி நாளுக்கு நாள் மேலோங்கி கொண்டு செல்வது கவலைக்கிடமான விஷயமாக விளங்குகிறது.
இந்த போதைப்பொருள் பாவனையால் படுபாதாளத்தை நோக்கிப் பயணிக்கும் நம் சமுதாயத்தை காப்பாற்ற வேண்டும். இது ஒவ்வொருவரினதும் கட்டாயக் கடமையாகும். தீய நட்பு வட்டாரங்களுக்குள் நட்போடு உறவாடி பொழுது போக்குக்காக என அனேகமாக ஆரம்பிக்கும் இப்போதை பழக்கமானது நாளடைவில் ஆல விருட்சமாக வளர்ந்து அதனை விட்டு விட முடியாத துர்பாக்கிய நிலைக்கு மனிதனை தள்ளி விடுகிறது. இந்த போதை பாவனைக்கு அனேகமாக பாடசாலை மாணவர்களும்,இளைஞர்களும்,சில யுவதிகளும் அடிமைப் பட்டிருப்பது ஜீரணிக்க முடியாத உண்மையாகும்.
மதுபானம்,அபின்,கஞ்சா,பான்மசாலா,ஹெரொய்ன்,கொக்கையின், பிரவுன் சுகர்,என பல ரகங்களில் கண்ணை கவரும் வடிவங்களில் சந்தையில் உலா வருகின்றன. முதலில் இவை பாவிப்பதன் மூலம் மனிதனை உற்சாகப் படுத்தி காலப்போக்கில் படுபாதாளத்தில் தள்ளி விடுகிறது. இதன் பாவனையால் ஏற்படும் உடல் மனரீதியான பாதிப்புகளையும், உயிர் ஆபத்துகளையும் அன்றாடம் காணவும், கேட்கவும் கூடியதாகவும் இருக்கிறது. இதன் எதிரொலியானது இஸ்லாமிய மார்க்கத்துக்கு முரணான தீய செயல்களான கொலை,கொள்ளை கற்பழிப்பு என தொடர்கிறது.
எமது நாட்டில் நடைபெற்ற எத்தனையோ கொலைகள் சிறுவர் மற்றும் பெண் துஷ்பிரயோகங்கள் இந்த போதைப்பொருள் பாவனையாளர்களால் ஏற்பட்டதே என்பதை நாம் ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொள்கிறோம். இதற்கு அடிமையான எத்தனையோ இளைஞர்கள் பொருளாதார சிக்கல்களுக்கு ஆலாகி பிறரை வற்புறுத்தி, துன்புறுத்தி, சண்டையிட்டு, களவாடி பெற்று கொள்ள முயல்கின்றனர்.பள்ளி வாசல் உண்டியல்களை கூட திருடி தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றனர். இதனால் சிறைச்சாலைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
போதைப்பாவனையாளர்களின் குடும்பங்கள் நிம்மதியை இழக்கின்றனர். பொருளாதாரத்தை இழக்கின்றனர். குடும்பமே இதனால் சமுதாயத்துக்கு முகம் கொடுக்க முடியாமல் தலை குனிவை சந்திக்கின்றனர். அது மட்டுமல்ல உள ரீதியான பாதிப்புகளுக்கும், மன அழுத்தங்களுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.
இஸ்லாத்தில் போதைப் பொருட்களை உட்கொள்வதும் விற்பனை செய்வதும் மிக மோசமான பாவங்களாகும்.
ஐக்கிய நாட்டு சபையின் 2020 ஆண்டுக்கான மருத்துவ அறிக்கை படி உலகிலே சுமார் 3 கோடிக்கும் மேற்பட்டோர் இந்த போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது அதை விட இரட்டிப்பாக அது வளர்ந்திருக்கும்.ஒவ்வொரு வருடத்திலும் ஜுன் 26 ஆம் திகதி சர்வதேச போதைப்பொருள் தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனை மையப்படுத்தி போதைப் பொருள் பாவனையை எதிர்க்க போர் கொடி தூக்க வேண்டும்.
அவரவர் பகுதிகளில் உள்ள போதைப்பொருள் பாவனையாளர்களை இனம் கண்டு அவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடாத்த வேண்டும். இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பாடசாலை, பல்கலைக்கழக நிர்வாகங்களும்,பள்ளி வாசல் நிர்வாகங்களும்,பொது அமைப்புகளும், நலன் விரும்பிகளும், முன்வர வேண்டும். அத்தோடு அரசாங்கமும் முன்வர வேண்டும்.
போதைப்பொருள் நாட்டுக்குள் ஊடுருவும் வழி முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும். போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும். சிறந்த புணருத்தாபனங்களை உருவாக்க வேண்டும்.
இறை தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள் “போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்டதாகும்.எவன் ஒருவன் மதுவுக்கு அடிமையாகி விட்டானோ அவன் சுவனம் செல்ல மாட்டான்” எம் சமுதாயத்தை அல்லாஹ் பாதுகாப்பானாக!
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply