பெருக்கெடுத்த களனி கங்கை உடன் வெளியேறுங்கள் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
களனி கங்கையின் நீர்மட்டம் ஆபத்தான விகிதத்தில் உயர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, கிளென்கோர்ஸில் 21.9 மீட்டரை நீர் மட்டம் தாண்டியுள்ளது.
மேலும், ஹன்வெல்லவில் 10 மீட்டரைத் தாண்டியுள்ளது. இரண்டும் தற்போது பாரிய வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்தும் மட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, வெகுவாக வெள்ள நிலை அதிகரித்து தீவிரமடையக் கூடிய சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, களனி கங்கையை அண்டிய பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்வதோடு, பாதுகாப்ப வழிமுறைகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்னும் ஒரு சில மணிநேரங்களில் களனி கங்கையின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்து வெள்ள
நிலைமை தீவிரமடைய வாய்ப்புள்ளாக பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
கங்கைக் கரையை அண்டிய, கொலன்னாவ, கடுவெல, ஹோமாகம, அவிசாவளை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் வேகமாக உயரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, கடும் இக்கட்டான நேரத்தில் படகுகளோ, உலங்குவானூர்திகளோ உடனடியாக வராது.
எனவே, வீடுகளுக்குள் இருந்து ஆபத்தை எதிர்நோக்குவதை விடுத்து உனடியாக பாதுகாப்பான இடத்தை நோக்கி நகருங்கள் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை களனி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மேவெல்ல, பெத்தியகொட, சிங்கரமுல்ல, பேலியகொட கங்கபத, வெலேகொட, ஹுணுபிட்டிய வடக்கு மற்றும் ஹுணுபிட்டிய தெற்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகள் தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக களனி பிரதேச செயலாளர் ஜே.ஏ.டி.ஜி.எஸ். ரணசிங்க தெரிவித்தார்.
களனி ரஜ மஹா விஹாரையில் உள்ள – விஹார மஹா தேவி யாத்திரை மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தங்குமிடங்களை நோக்கி உடனடியாக செல்லுமாறு களனி பிரதேச செயலாளர் மக்களை மேலும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், குருகுல கல்லூரி, ஸ்ரீ தர்மலோக கல்லூரி, எச்.கே. தர்மதாச உயர்நிலைப் பள்ளி, ஸ்ரீ ஜயதிலகராம விகாரை, வெதமுல்ல மகா வித்தியாலயம், துடுகெமுனு மகா வித்தியாலயம், வெலிபாறை விகாரை உள்ளிட்ட இடங்கள் பாதுகாப்பு தங்குமிடங்களாக மாற்றப்பட்டுள்ளன.
எனவே, அபாய நிலையில் இருக்கும் மக்கள் உடனடியாக குறித்த பாதுகாப்பு தங்குமிடங்களை நோக்கிச் செல்லுமாற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, களனி பிரதேச செயலகப் பிரிவில் 4,000 குடும்பங்களைச் சேர்ந்த 21,000 பேர் அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு களனி கங்கையை அண்டியிருக்கும் ஹங்வெல்ல பகுதி முற்றுமுழுதாக நீரில் மூழ்கியுள்ளது.
அதேசமயம், நாகலகம் வீதியும் முற்றுமுழுதாக வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கியிருக்கின்றது.
நாகலம் வீதி வெள்ளத்தில் மூழ்கினால் கொழும்பில் பல இடங்களில் வெள்ள அபாயத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்றும் எனவே வெள்ள அபாயம் இருக்கும் பகுதிகளில் இருக்கும் மக்கள் மீட்பு குழுவினரின் ஆலோசனைக்கு அமைய பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply