இயல்பு வாழ்வை மீட்டெடுக்க அர்ப்பணிப்புடன் செயற்படுங்கள்: ஜனாதிபதி

பொதுமக்களுக்கு தேவையான அவசர சேவைகளை வழங்குவதில், அனைத்து நிறுவனங்களுக்கிடையிலும் தொடர்ச்சியான தொடர்பைப் பேணுவதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பொருளாதார முடிவுகளை எடுப்பதில் துல்லியமான தரவுகளும் முக்கியமாகவுள்ளதால், துல்லியமான தரவுகளை வழங்குவது அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அனர்த்தத்தால் சேதமடைந்த பயிர் நிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் பணியை டிசம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் முடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், இழப்பீட்டுத் தொகையை மிகவும் தகுதியானவர்களுக்கு வழங்கக்கூடிய வகையில், துல்லியமான தரவுகளை வேறுபடுத்திக் கண்டறியுமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

அனர்த்தத்தால் சேதமடைந்த பிரதேசங்கள் தொடர்பில் நிலைமைகளை கண்டறிவதற்காக கண்டி,மாத்தளை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களுக்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டிருந்தார். இவ்விஜயத்தில் மாவட்டந்தோறும் நடத்தப்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி, இவ்விடயங்களை குறிப்பிட்டார்.இக்கூட்டங்களில் கருத்துரைத்த அவர்;

அனர்த்தத்திற்குப் பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப நீண்ட காலம் எடுக்குமென சிலர் எதிர்பார்த்தனர்.இருந்த போதிலும்,மிகக் குறுகிய காலத்தில் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவர அரசாங்கத்தால் முடிந்துள்ளது. இன்னும் சிறிது காலம் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் எதிர்பார்த்த இலக்குகளை அடைய முடியும். வெள்ளத்தால் சேதமடைந்த அநுராதபுர மாவட்டத்தில் பெரும் போகத்தில் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு தயார்படுத்துங்கள்.தேசிய தேவையாகக் கருதி,அனைத்து தொடர்புடைய நிறுவனங்களும் நன்கு ஒருங்கிணைந்த முறையில் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கவும், தற்காலிக பழுதுபார்ப்புகளை மேற்கொண்டு தேவையான நீர்ப்பாசன நீர் விநியோகத்தை வழங்குங்கள்.

பயிர்ச்செய்கையில் ஈடுபட முடியுமான விவசாயிகளின் எண்ணிக்கை மற்றும் பயிரிடக்கூடிய விவசாய நிலங்களின் அளவை உடனடியாகக் கண்டறிந்து, அவர்களுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள ரூ.150,000 இழப்பீட்டை உடனடியாக வழங்குங்கள்.அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் மரக்கறி பயிர்ச் செய்கை குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை பெற்று, அவர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஹெக்டெயாருக்கு 200,000 ரூபா இழப்பீட்டை வழங்கவும், மரக்கறி பயிர்ச் செய்கைக்கு வழங்கப்படும் அதே இழப்பீட்டுத் தொகையை வாழை பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்ட சேதத்திற்கு வழங்கக்கூடிய வகையில் தேவையான திருத்தங்களைச் செய்வது அவசியம். இதேபோன்று கால்நடைத் துறைக்கு அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. பண்ணைகளின் அளவு மற்றும் விலங்குகளின் எண்ணிக்கை குறித்த புதுப்பித்த தரவுகளைப் பேண வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார். வெள்ளம், சூறாவளி, மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்ளைத் தடுக்க முடியாவிட்டாலும், உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் ஏற்படும் சேதங்களைத் தடுக்க முடியும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply