வேலணை ஆதார வைத்தியசாலை குடும்பநல உத்தியோகத்தர் மரணம்

வேலணை ஆதார வைத்தியசாலையின் குடும்பநல உத்தியோகத்தர் தர்சிகா சரவணை நேற்றுக்காலை மருத்துவமனையிலுள்ள தாதியர் விடுதியிலிருந்து கழுத்தில் சுருக்கிட்டுத் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் நேற்றுக்காலை 7 மணிக்கு வைத்தியசாலை வரவுப் பதிவேட்டில் ஒப்பமிட்ட தர்சிகா தனது கடமைகளைச் செய்து கொண்டிருந்த நிலையில் திடீரெனக் காணாமற் போயுள்ளார். சக மருத்துவப் பணியாளர்கள் இவரைத் தேடியபோதே தாதிய விடுதியிலுள்ள மின் விசிறியொன்றில் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் இவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து ஊர்காவற்துறைப் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் இது குறித்து ஊர்காவற்துறை நீதிமன்றின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற ஊர்காவற்துறை மாவட்டப் பதில் நீதிபதி இ.சபேசன் மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து நேற்றுப் பிற்பகல் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply