இராணுவத்தினருக்கு இழப்பு, ஆனால் பின்னடைவில்லை: உதய நாணயகார குறிப்பிட்டுள்ளார்
வன்னி மோதல்களில் இராணுவத்தினருக்குப் பின்னடைவு ஏற்படவில்லையெனத் தெரிவித்திருக்கும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார, கிளிநொச்சியைக் கைப்பற்றுவது பற்றி கால எல்லை எதுவும் குறிப்பிட்டுக் கூறமுடியாதெனக் குறிப்பிட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை நடந்த மோதல்களில் இராணுவத்தினருக்கு இழப்புக்கள் ஏற்பட்டபோதும், விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட இழப்பைவிடக் குறைந்தளவு இழப்புக்களே தமக்கு ஏற்பட்டதாக கொழும்பு ஊடகமொன்றிடம் அவர் கூறினார்.
கிளிநொச்சியை அண்மித்த பகுதியில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த மண் அணைகள் மற்றும் பாதுகாப்பு வேலிகளை இராணுவத்தினர் தகர்த்து 5 கிலோ மீற்றர் நிலப்பரப்பை கைப்பற்றியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
பின்னடைவு ஏற்படும் அளவுக்கு எமக்கு இழப்பு ஏற்படவில்லை. மேலதிக பகுதிகளை கைப்பற்றக் கூடியதாக இருந்தது. பல மணிநேரம் தொடர்ந்த மோதல்களில் விடுதலைப் புலிகளுக்கு இழப்புக்கள் அதிகம் ஏற்பட்டன” என்றார் அவர்.
புதிதாகக் கடைப்பிடிக்கப்படும் இராணுவ உத்திமூலம் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டுவிடும் எனவும், ஆயினும், கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான கால எல்லைபற்றி உறுதியாகக் கூறமுடியாதுள்ளது எனவும் பிரிகேடியர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கடந்த சில வாரங்களில் கிளிநொச்சிப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் செவ்வாய்க்கிழமை இராணுவத்தினருக்கு மூன்றாவது தடவையாக பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன என விடுதலைப் புலிகளின் களமுனைத் தளபதிகள் கூறியிருப்பதாக விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் தமிழ் நெட் இணையத்தளத்துக்குக் கூறியிருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை மேதல்களில் 100 இராணுவத்தினர் கொல்லப்பட்டு, 250 பேர் காயமடைந்ததாக புலித்தேவன் தமிழ் நெட்டுக்குக் கூறியிருந்ததாகவும் அந்த ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply