சிறுபான்மை அரசியல் பிரதிநிதித்துவங்களை ஓரங்கட்டவே புதிய தேர்தல் முறை அறிமுகம் : அநுரகுமார திசாநாயக்க
சர்வாதிகாரத்தை விஸ்தரிக்கவும் சிறுபான்மை அரசியல் பிரதிநிதித்துவங்களை ஓரங்கட்டவுமே அரசாங்கம் புதிய தேர்தல் முறைமையை முன் வைத்துள்ளது. எனவே ஜனநாயக ரீதியிலான மக்கள் பிரதிநிதித்துவங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள அரசாங்கத்தின் புதிய தேர்தல் முறைமைக்கு எதிராக செயற்பட போவதாக ஜே.வி.பி. யின் அரசியல் குழுத் தலைவரும் ஜனநாயக தேசியக் கூட்டனியின் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரமும் விகிதாசார தேர்தல் முறைமையும் ஒட்டி வந்த இரட்டைக் குழந்தைகள் ஆகவே மாற்றியமைத்தால் இரண்டிலுமே திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். இல்லையென்றால் நாட்டின் மக்களாட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு விடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று புதன் கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பி. யின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு அநுரகுமார திசாநாயக்க எம்.பி. கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
உள்ளூராட்சிமன்ற தேர்தல் சட்ட மூலத்தை அரசாங்கம் முன் வைத்துள்ளது. இந்த அவசர முன் வைப்பிற்கு அரசாங்கம் கூறும் காரணம் தான் தேர்தலுக்காக கூடுதலான நிதி செலவிடப்படுகின்றது. அத்தோடு அரசியல் துறைகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இவ்வாறான காரணிகளையே அரசாங்கம் புதிய தேர்தல் முறையை முன் வைப்பதற்காக முன் வைத்துள்ளது.
இதற்கு ஐ.தே.க. பத்திரிகைகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்துவதுடன் மாகாணச் சபைகளில் அரசாங்கத்தின் தேர்தல் முறைமைக்கு ஆதரவாக வாக்களிக்கின்றது. நிலைமை இவ்வாறு இருக்க அரசாங்கம் ஏன் அவசரமாக தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும். 1978 அரசியலமைப்பின் படி நிறைவேற்று அதிகாரத்தை கட்டுப்படுத்தும் வகையிலேயே விகிதாசார அடிப்படையிலான தேர்தல் முறைமை கொண்டு வரப்பட்டது. இந்த முறையில் ஒரளவேனும் காணப்பட்ட நேர்மையான மக்கள் பிரதிநிதித்துவங்களுக்கு அரசாங்கம் முன் வைத்துள்ள புதிய தேர்தல் முறைமையால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே தான் தேர்தல் முறைமையை மாற்றுவதாயின் நிறைவேற்று அதிகாரத்திலும் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என ஜே.வி.பி. வலியுறுத்துகின்றது.
தற்போது தொகுதி வாரியிலான முறைமையினால் சிறுபான்மை அரசியல் பிரதிநிதித்துவங்களுக்கும் சிறிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்துவங்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மேலும் புதிய தேர்தல் முறைமையால் பெண்கள் மற்றும் இளைஞர்களின் அரசியல் பிரதிநிதித்துவங்கள் குறைக்கப்பட்டுள்ளன. தமக்கு தேவையான நபர்களை நியமித்துக் கொண்டு தொகுதிகளை பிரித்து தொடர்ந்தும் மோசடிகளின் ஊடாக தேர்தலில் வெற்றி பெறுவதே அரசாங்கத்தின் நோக்கம்.
எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கு தொகுதிகளை பிரிக்கும் உரிமை கிடையாது. சுயாதீன ஆணைக்குழுக்கள் இல்லாத ஒரு சூழலில் பாரிய சர்வாதிகார விஸ்தரிப்பை நோக்கி அரசு பயணம் செய்கின்றது எனக்கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply