விட்டுக்கொடுப்புடன் மனந்திறந்து பேசினால் பிரச்சினைக்கு இலகுவில் தீர்வு காணலாம் : டக்ளஸ் தேவானந்தா
வடபகுதியில் விரைவில் நடத்தப்படவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தமது கட்சி தனித்து அல்லது மற்ற கட்சிகளுடன் ஒன்றிணைந்து “அபிவிருத்தியும் அதிகாரப் பகிர்வும்” என்ற தொனிப்பொருளில் போட்டியிட விரும்புகிறது என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மக்களின் நலன்தான் எங்களுடைய இலட்சியமாக இருக்கிறது. நாம், ஒற்றுமையாக செயற்பட்டு எங்கள் அரசியல் வலுவை பெருக்கிக் கொள்வதன் மூலமே எங்கள் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயபூர்வமான, நிரந்தரமான தீர்வை காணமுடியுமென்றும் அமைச்சர் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.
அரசாங்கத்தில் நேரடி மோதல்களை ஏற்படுத்தி, எமது உரிமைகளை பெற்றுக் கொள்ள முயற்சி செய்வதைவிட, அரசாங்கத் தலைவர்களுடன் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன், நட்புறவுடன் பேசினால் இதைவிட இலகுவில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீத்துக் கொள்ளலாம் என்ற தனிப்பட்ட நிலைப்பாட்டில் தாம் இருப்ப தாகவும், இல்லையானால் கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளை நாம் எதிர்நோக்க வேண்டியிரு க்கும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
1987 ஆம் ஆண்டில் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் எல்.ரி.ரி.ஈ தரப்பில் 651 போராளிகளே மரணித்தார்கள் என்ற தகவலை வெளியிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்த ஒப்பந்தத்தை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சரியான முறையில் அன்று பயன்படுத்தியிருந்தால் தமிழ் மக்கள் பயனடைந்திருப்பார்கள். அதற்கு பின்னர் ஏற்பட்ட மனித அழிவும், பொருள் அழிவும் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று கூறினார்.
அன்று, தமிழ் கட்சிகள் சமயோசி தமாக சிந்தித்து செயலாற்றி இருந்தால், இன்று தமிழ் மக்களுக்கு இத்தகைய துன்பங்களை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என்று அவர் கூறினார்.
வடபகுதி கடல் பிரதேசத்தில் இந்திய மீனவர்களின் அட்டூழியங்கள் இப்போது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது என்றும், இந்தியர்கள் எமது கடல் எல்லைக்குள் புகுந்து, எங்கள் கடல்வளங்களை சட்ட விரோதமாக அபகரித்துச்
செல்வதனால், எமது நாட்டின் பொரு ளாதாரத்திற்கு பதிப்பு ஏற்படுவதுடன், எமது மீனவ பெருமக்கள் கஷ்ட நிலையை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்திய மீனவர்கள் எமது மீன்பிடி படகுகளை சேதப்படுத்துவ துடன், எங்கள் மீனவர்களின் வலைகளையும் வெட்டி சேதப்படுத்துகிறார்கள் என்றும், இப்பிரச்சினையை அரசியலாக்கி தனது செல்வாக்கை பெருக்கிக் கொள்வதற்கு தாம் மேற்கொள்ளும் ஒரு முயற்சியாக இதனை எவரும் தப்பபிப்பிராயம் கொள்ளலாகாது என்றும் அமைச்சர் தேவானந்தா தெரிவித்தார்.
நாம் மக்களோடு தொடர்ந்து இருப்பதைக் கண்டு மக்கள் மத்தியில் இருந்து எமக்கு பெருகிவரும் ஆதரவைக் கண்டு சிலர் பயப்படுகிறார்கள். அந்த அரசியல் பயத் தின் காரணமாகவே வெறும் காழ்ப்புணர்ச்சி களால் அவர்கள் வழமைபோல் எம்மீதான அவதூறுகளை பரப்பி வருகிறார்கள் என்றும் கூறினார்.
நாங்கள் எரிந்தாலும் மணக்கும் சந்தனக் கட்டைகள். தூற்றுவோர் தூற்றட்டும் போற்றுவோர் போற்றட்டும். நாம் செல்லும் வழி என்றும் நேர்மையாகவே இருக்கும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply