ஐ.தே.க.வை பிளவுபடுத்த எந்தவொரு நபருக்கும் இடமளியேன்: ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுபடுத்திவிடலாம் என எந்தவொரு நபரும் கனவு கண்டு விடக்கூடாது. அவ்வாறு இடம் பெறுவதற்கு கட்சித் தலைவர் என்ற வகையில் எவருக்கும் நான் இடமளிக்க மாட்டேன் என சூளுரைத்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, கட்சியை வெற்றிப் பாதையில் அழைத்து சென்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு அனைவரும் ஐக்கியப் பட்டு செயலில் இறங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார்.

கட்சியைக் கட்டியெழுப்புவதற்கு உள்ளூராட்சி சபைகளில் தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்பதுடன் எந்த சந்தர்ப்பத்திலும் தமக்கு வாக்களித்த மக்களை மறந்து விடக் கூடாது. மேலும் அந்த மக்களின் தேவைகளை அறிந்து செயற்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் தெரிவான 897 உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு நேற்று புதன்கிழமை கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்றது. இதன் போது வெற்றிபெற்ற 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தலைவர்கள், உபதலைவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் அதிகமான இடங்களை கைப்பற்றியிருக்கின்றது. எனினும் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பதாக தொகுதி வாரியான தேர்தல்களை நடத்த தீர்மானித்திருப்பதாக அவ்வாறு தொகுதிவாரித் தேர்தல் நடைபெறும் பட்சத்தில் ஐக்கிய தேசியக்கட்சி விலாசம் இல்லாமல் போய்விடும் என்றும் கூறியது.

இருந்த போதிலும் தொகுதி வாரியான தேர்தலை நடத்துமாறு நாம் அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தோம். ஆனால் அரசாங்கமோ தொகுதி வாரித் தேர்தல் தேவையில்லையென பின்னர் அறிவித்தது. அதுமட்டுமில்லாது இந்தத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ள மாட்டார் என கூறப்பட்டது. ஆனால் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்காக சந்தையாக சந்தையாக ஏறி இறங்கி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி ஒருவர் அல்லது பிரதமர் ஒருவர் இவ்வாறு உள்ளூராட்சித் தேர்தல்களுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது கிடையாது .

இவ்வாறானதொரு நிலையில் தான் ஐக்கிய தேசியக்கட்சியினால் 897 உறுப்பினர்களை பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது. இது ஒருவகையில் எமக்கு மகிழ்ச்சியான விடயமே. எனவே நாம் தோல்விகளை சந்தித்து விட்டோம் என்பதற்காக துவண்டுவிடக்கூடாது. வெற்றி தோல்வி என்பதை சகஜமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அத்துடன் நின்று விடாது ஐக்கிய தேசியக் கட்சியை கட்டியெழுப்பி அதனை ஆட்சி அதிகாரத்தில் நிறுத்துவதற்கு ஏற்றவகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தருணம் அமைந்து வந்துள்ளது.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியை பிளவு படுத்திவிடலாம் என சிலர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறான முயற்சிகளுக்கும் பிளவுகளுக்கும் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் இடமளிக்க மாட்டேன் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். தற்போது புதிய யாப்பின் பிரகாரமே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் கட்சியின் எந்தவொரு தீர்மானமும் இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படவேண்டும் என்பது செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. இதன் அடிப்படையில் செயற்பட்டு வருகின்ற ஐக்கிய தேசியக் கட்சியிடம் பாகுபாடுகளுக்கும் வேறுபாடுகளுக்கும் இடம் கிடையாது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply