இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கம் கிடையாது

இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கம் கிடையாது என ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு பரிந்துரைகளுக்கு அமைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்திய போதிலும், ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமென எதிர் பார்க்கவில்லை என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி பேர்னாட் சவாஜ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவினால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறெனினும், இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் முனைப்பு காட்டுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை எனவும், அதனை முற்று முழுதாக நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் நாடுகளுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகவும், இலங்கை இதற்கு விதிவிலக்கு அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சட்டவிரோதமான முறையில் ஐரோப்பிய நாடுகளுக்கு பிரவேசிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியது தனிப்பட்ட நாடுகளின் பொறுப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையுடன் நீண்ட காலமாக மனிதாபிமான மற்றும் பொருளாதார உறவுகளைப் பேணி வருவதாகவும் தொடர்ந்தும் உறவுகளைப் பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் நோட்டோ மற்றும் மேற்குலக நாடுகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply