இந்தியா வலியுறுத்தியுள்ள விடயங்கள் அரசாங்க நிகழ்ச்சி நிரலில் முதன்மையாக உள்ளன : டலஸ்

இலங்கை விவகாரம் தொடர்பில் இந்தியா வலியுறுத்தியுள்ள விடயங்களானது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் அடங்கிய நிகழ்ச்சி நிரலில் முதன்மையாக அமைந்துள்ள அம்சங்களாகும். முக்கியமாக அரசியல் தீர்வுகாணும் செயற்பாட்டில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் நடத்தும் பேச்சுக்களில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அவசரகால சட்டத்தை நீக்குவதுடன் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்தும் விசாரணை செய்யவேண்டும் என்று இந்தியா வலியுறுத்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் இடம்பெயர்ந்த மக்களை விரைவில் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றவேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்தவேண்டியது அவசியம் என்றும் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக தீர்வுப் பொதி அவசியமாகும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும இவ்விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில் : யுத்தத்துக்கு பின்னர் நாட்டில் அபிவிருத்தியை மேற்கொள்வதிலும் ஏனைய நல்லிணக்க வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதிலும் அரசாங்கம் கவனம் செலுத்திவருகின்றது. அதாவது அரசாங்கம் பாரிய வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவருகின்றது.

ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அரசாங்கம் பயணிக்கின்றது. இந்நிலையில் இலங்கை விவகாரம் தொடர்பில் இந்தியா வலியுறுத்தியுள்ள விடயங்களானது எமது வேலைத்திட்டங்கள் அடங்கிய நிகழ்ச்சி நிரலில் முதன்மை இடத்தில் உள்ளது என்று கூறலாம். அவைதான் எமது முதன்மை நோக்கமாகவுள்ள விடயங்களாகும். அவற்றை நிறைவேற்றுவதை நோக்கியே நாங்கள் பயணிக்கின்றோம். எமது திட்டங்கள் அவையாகவே உள்ளன.

மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து இந்தியா குறிப்பிட்டுள்ளது. உண்மையில் மீள்குடியேற்றத்தை பொறுத்தவரை நாங்கள் முதன்மை இடத்தில் இருக்கின்றோம். அதாவது மூன்று இலட்சம் மக்களில் அதிகமானோரை குறுகிய காலப்பகுதியில் மீள்குடியேற்றியுள்ளோம். ஆரம்பத்தில் மீள்குடியேற்றம் தொடர்பில் பல விமர்சனங்கள் வெளியிடப்பட்டன. ஆனால் முகாம்களில் 11 ஆயிரம் மக்களே எஞ்சியுள்ளனர். அந்தளவுக்கு மிக வேகமாக நாம் மீள்குடியேற்றத்தை முன்னெடுத்துள்ளோம்.

இதேவேளை அவசரகால சட்ட விதிகளை நீக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நாங்கள் ஏற்கனவே மிகவும் அதிகமான அவசரகால சட்ட விதிகளை நீக்கிவிட்டோம். ஒருசில விதிகளே மீதமுள்ளன. அவற்றிலும் சிலவற்றை நீக்குவது குறித்து ஆராய்ந்துவருகின்றோம்.

மேலும் நாடு என்ற வகையில் பல முன்னேற்றங்களை நாங்கள் கண்டுள்ளோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் என்றுமில்லாதவாறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. கடந்த காலங்களில் வெசாக் நிகழ்வுகள் கொண்டாடப்படாத சந்தர்ப்பங்கள் இருந்தன.

இன்று முழு நாடும் வெசாக் பண்டிகையை கொண்டாடுகின்றது. மக்கள் ஒற்றுமைடயுடன் ஒன்றிணைந்து செயற்படுகின்றனர்.

இதேவேளை அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பல சுற்றுப் பேச்சுக்கள் நிறைவடைந்துள்ளன. தொடர்ந்து பேச்சுக்கள் இடம்பெற்றுவருகின்றன. இந்நிலையில் சுமுகமான முறையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தைகளின்போது அரசியல் தீர்வு தொடர்பான இணக்கபபாடு ஒன்று எட்டப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அந்த வகையில் இந்தியா வலியுறுத்தியுள்ள விடயங்கள் எமது நிகழ்ச்சி நிரலில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள அம்சங்களாகும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply