நெதர்லாந்து விசாரணையில் நெடியவன்
விடுதலைப் புலிகளின் அறியப்பட்ட தலைவர்களில் ஒருவராக கருதப்படும் நெடியவன் என்று அழைக்கப்படும் பேரின்பநாயகம் சிவபரன் நெதர்லாந்து காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு வருவதாக நார்வே அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். விடுதலைப் புலிகள் அமைப்புக்காக வெளிநாடுகளில் இருந்து செயல்பட்டுவந்தவர் என்று கருதப்படும் நெடியவன் கடந்த திங்கள் கிழமையில் இருந்து நார்வேயின் தலைநகர் ஆஸ்லோவில் வைத்து விசாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது விசாரணை தொடர்பில் நெதர்லாந்து குழுவுக்குஉதவிகளை செய்து வருவதாக தெரிவித்த நார்வே காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
நெடியவன் மீதான விசாரணை குறித்த மேலதிக விவரங்களைக் கூற அவர் மறுத்து விட்டார்.
விடுதலைப் புலிகள் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவராக கருதப்படும் நெடியவன், புலிகள் இயக்கம் இலங்கையில் தோல்வியை சந்தித்த பிறகு அதன் சர்வதேச கட்டமைப்பின் ஒரு பிரிவுக்கு தலைமை தாங்கி செயல்பட்டு வந்தாரேன கருதப்படுகிறது.
நெடியவன் விசாரிக்கப்படுவதாக வரும் செய்திகளை நார்வே கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பாதுகாப்புக் குழுவின் தலைவருமான பீட்டர் எஸ் கிட்மார்க் உறுதிசெய்துள்ளார்.
தமது ஆயுதப் போரட்டத்தை முன்னெடுப்பதற்காக விடுதலைப் புலிகள் நார்வேயிலும் வேறு இடங்களிலும் பண வசூல் செய்வதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கச்சொல்லி தான் காவல் துறையைக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கிட்மார்க் கூறினார்.
புலிகள் அமைப்புக்கு நார்வேயிலும் தடைவிதிக்கப்பட வேண்டும் என்று தாம் கோருவதை இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைபாட்டை தாம் முன்னெடுப்பதாகப் பொருள் கொள்ளக் கூடாது என்று அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply