கனிமொழியை சிறையில் அடைக்க உத்தரவு
தொலைபேசி நிறுவனங்களுக்கு இரண்டாம் தலைமுறை அலைக்கற்றைகளை ஒதுக்கியதில் ஊழல் நடந்தாதகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற மேலவை உறுப்பினரும் திமுக தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழியை சிறையில் அடைக்கச் சொல்லி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜா, அவரோடு இருந்த மூத்த அதிகாரிகள்,தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் சிலவற்றின் முக்கிய அதிகாரிகள் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக ஏப்ரல் மாதம் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது குற்றப் பத்திரிக்கையில் கனிமொழியின் பெயரும், கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமாரின் பெயரும் இடம்பெற்றிருந்தன.
அதையடுத்து இவர்கள் இருவரும் பிணை கோரியிருந்தனர்.
இது குறித்த வழக்கு விசாரணை முன்பு இருமுறை ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால் வெள்ளியன்று அவர்கள் இருவரையும் பிணையில் விட சிறப்பு நீதிபதி மறுத்துவிட்டார். கனிமொழியையும் சரத்குமாரையும் சிறையில் அடைக்கச் சொல்லி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இவ்விருவர் மீதான கடுமையான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுவதனாலும், இவர்கள் வெளியில் இருந்தால் சாட்சியங்களை இவர்கள் கலைக்கக்கூடும் என்பதாலும், தவிர தாங்கள் ஏன் வெளியில் விடப்பட வேண்டும் என்பதை இவர்கள் திருப்தியளிக்கும் வகையில் விளக்கியிருக்கவில்லை என்பதாலும் இவர்களின் பிணை மனுக்களை நிராகரிப்பத்டாக நீதிபதி விளக்கம் அளித்துள்ளார்.
இதனால் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு கனிமொழி திஹார் சிறையில் அடைக்கப்படுவார்.
ஆ.ராசா தொலை தொடர்பு அமைச்சராக இருந்தபோது அவரது ஒதுக்கீட்டால் பெரும் பயனடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வான் டெலிகாம் நிறுவனம் பினாமி நிறுவனங்கள் மூலம் கலைஞர் டிவிக்கு 214 கோடி ரூபாயை அளித்ததாகவும், இது லஞ்சப் பணம் என்றும் சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் இது வணிக ரீதியில் பெறப்பட்ட கடன் என்றும் அந்தப் பணம் வட்டியோடு திரும்ப கொடுக்கப்பட்டு விட்டது என்றும் கனிமொழி கூறிவருகிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply