ராசிக் கடத்தல் தொடர்பில் அழுத்தங்கள்

இலங்கையின் கிழக்கே திருகோணமலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அடையாளம் தெரியாத ஆட்களினால் கடத்திச்செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்ற பட்டாணி ராசிக் என்பவரது கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டவருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என புத்தளம் மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றது.

இது தொடர்பாக மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டிருக்கின்றது. சிடிஃப் எனப்படும் சமூக நம்பிக்கை நிதியம் என்ற தொண்டு நிறுவனத்தின் ஸ்தாபக நிர்வாகியான பட்டாணி ராசிக் என்பவரே கடத்திச் செல்லப்பட்டவாராவார்.

இவருடைய கையடக்கத் தொலைபேசியின் சிம் கார்டைப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் சகாப்தீன் நவுசாத் என்பவர் கிளிநொச்சியில் வைத்து இம்மாதம் 8 ஆம் திகதி பொலிசாரினால் கைது செய்யப்பட்டதாகவும், ஆயினும் அவர் இதுவரையிலும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படாத காரணத்தினால், இவர் தொடர்ந்தும் பொலிசாரினால் விசாரணை செய்யப்படுகின்றாரா அல்லது விடுதலை செய்யப்பட்டு விட்டாரா என்பது பற்றி தெரியாதிருப்பதனால், பொலிஸ் விசாரணைகளில் பல்வேறு சந்தேகம் எழுந்திருப்பதன் காரணமாகவே சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உதவியை நாடியிருப்பதாக அந்தக் குழுவிடம் மகஜர் கையளிப்பதற்காகச் சென்றிருந்த புத்தளம் மாவட்ட உலமாக்கள் சபையின் தலைவர் அப்துல்லா மொகமட் ஆலிம் அவர்கள் கூறுகின்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸ் தரப்பு பேச்சாளரான பிரசாந்த ஜயக்கொடி அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது. சந்தேக நபர் சட்ட விதிகளுக்கமைய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் விசாரணைகள் முடியுமுன்னர் அது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply