வடக்கின் தேர்தல் பிரசாரப் பணிகளில் இராணுவத்தினர்: ரணில்
வடக்கில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவது அவசியமாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் அரசாங்கம் நடத்தி வரும் பேச்சுவார்த்தை, இந்தியா வலியுறுத்தி வருகின்ற தீர்வு என்பவற்றின் வெற்றிகள் இந்தத் தேர்தலில் நடத்தப்படுகின்ற வழிமுறைகளிலேயே தங்கியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கிறார். ஒரு போதும் இல்லாத வகையில் வடக்கின் தேர்தல் பிரசாரப் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்ற அதேவேளை ஆயுதக் குழுக்கள் பகிரங்கமாக உலா வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வடக்கின் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் விஷேட கூற்று ஒன்றை வெளியிட்டு பேசுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டங்கள் உள்ளடங்கலாக இரண்டாவது கட்ட உள்ளூராட்சித் தேர்தல் நாளை 23 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பை தோல்வியடையச் செய்தவுடன் பாதுகாப்பு நிலைமை சுமுக நிலையை அடையாத நிலையிலும் வடக்கில் சில பிரதேசங்களில் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தேர்தல் நடாத்தப்பட்ட முறை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. ஆயுதம் ஏந்திய குழுக்கள் வெளிப்படையாக அச்சுறுத்தல் விடுத்தன. எதிர்க்கட்சி அபேட்சகர்களின் முறைப்பாடுகள் சம்பந்தமாக பொலிஸ் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. நிருவாக சேவைகள் நேரடியாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் தொடர்புபட்டிருந்தது. தேர்தல் பிரசாரங்களுக்கு பாதுகாப்பு பிரிவு ஈடுபடுத்தப்படவில்லை. இவ்வாறான ஒரு கௌரவமான சூழலை பாதுகாத்தமைக்காக நான் சரத்பொன்சேகாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் தேர்தல் ஒரு சுமுக நிலையிலேயே நடாத்தப்படுகின்றது. அதனால் இத் தேர்தலை முறையாக நடாத்துவது தேர்தல் ஆணையாளரினதும் அவரது அலுவலக உத்தியோகத்தர்களினதும் மற்றும் பொலிஸாரினதும் பொறுப்பாகும். ஆயினும் கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்படும் தேர்தல் சட்ட திட்டங்கள் மீறும் செயற்பாடுகள் தொடர்பாக அவதானிக்கும் பொழுது பொலிஸாரின் செயற்பாடுகள் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலையில் இல்லை என்பது தெளிவான விடயமாகும். அச்சுறுத்தல் வன்முறைகள் மற்றும் அரசு உடைமை துஷ்பிரயோகம் சம்பந்தமாக தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன என தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply