நிபந்தனை இல்லாமல் ஆதரவு வழங்க முடியாது: மனோ கணேசன்

கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கான எமது கட்சியின் ஆதரவை நிபந்தனையில்லாமல் வழங்க முடியாது. கடந்த பத்து வருடங்களாக கொழும்பு மாநகர சபையிலும், மேல் மாகாண சபையிலும், பாராளுமன்றத்திலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாம் வழங்கியதைப் போன்று நிபந்தனையற்ற ஆதரவை இனிமேலும் தொடர முடியாது. தலைநகர் தமிழ் மக்கள் தங்களது நலனை முன்னிறுத்தும் பேரம் பேசும் சக்தியை எங்களுக்குத் தந்துள்ளார்கள். இதுவே கொழும்பு மாநகரத்திலும், தெகிவளை கல்கிஸையிலும் கொலொன்னாவையிலும் தமிழ் மக்கள் எங்களுக்கு தந்துள்ள ஆணையாகும். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய தேசியக் கட்சி 24 ஆசனங்களை பெற்றுள்ளது. ஆளுங்கட்சி 16 ஆசனங்களைப் பெற்றுள்ளது. ஜே.வி.பி.யின் 1 ஆசனத்தை தவிர்த்து, முஸ்லிம் காங்கிரஸ் 2 ஆசனங்கள் உட்பட அரசு ஆதரவு குழுக்கள் 6 ஆசனங்களை பெற்றுள்ளன. எனவே அரசாங்கம் 22 ஆசனங்களை தன்வசம் கொண்டுள்ளது. மாநகர சபையில் 53 உறுப்பினர்களில் பெரும்பான்மை பலமான 27 ஆசனங்களைப் பெற்றுக் கொள்வதற்கு ஜனநாயக மக்கள் முன்னணியின் 6 ஆசனங்கள் எந்த கட்சிக்கும் தேவைப்படுகின்றன. அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்ற முறையில் ஐ.தே.க நிர்வாகத்தை ஏற்படுத்தினாலும், மாநகர சபையை சீராக கொண்டு செல்வதற்கு பெரும்பான்மை பலம் தேவைப்படுகின்றது. இச்சூழ்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய, ஜயலத் ஜயவர்தன ஆகியோருடன் இன்று (10.10.2011) மாலை நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் மனோ கணேசன் தெரிவித்துள்ளதாவது,

நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க எம்மிடம் தெரிவித்த கருத்துக்களை இன்றும், நாளையும் நடைபெறவுள்ள கட்சியின் தலைமைக்குழுக் கூட்டத்தில் நாம் விரிவாக ஆராய்வோம். அவசியப்படுமானால் எமது கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர்கள் மேலதிக பேச்சுவார்த்தைகளை சம்பந்தப்பட்டவர்களுடன் நடத்துவார்கள் மக்கள் எமக்கு தந்துள்ள ஆணைக்கு இசைவாக உரிய முடிவுகளை எமது கட்சி எடுக்கும். ஜனநாயக மக்கள் முன்னணிக்கு வாக்களித்து எங்கள் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்திய மக்களுக்கு எங்களது நடவடிக்கைகள் மூலமாகவே நன்றிகளை தெரிவிக்க விரும்புகின்றேன்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply