ஆட்கடத்தல்களின் பின்னணியில் அரசாங்கம்:ஐ.தே.க
ஆட்கடத்தல்களின் பின்னணியில் அரசாங்கமே செயற்படுகின்றது. எனவே இதற்கெதிராக மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார். கடத்தப்பட்ட குமார் குணரட்ணம் தொடர்பில் இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய தூதுவரிடம் அச்சுறுத்தும் விதத்தில் பாதுகாப்புச் செயலாளர் விபரங்களைக் கோரியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ஹரீன் பெர்ணான்டோ எம்.பி. இதனைத் தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
சோஷலிச முற்போக்கு முன்னணியின் தலைவர் குமார் குணரட்னத்தின் அரசியல் கொள்கையுடன் எமக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஜனநாயக ரீதியில் அரசியலில் ஈடுபடும் உரிமை அனைவருக்கும் உண்டு. இதனை மறுக்க முடியாது.
குமார் குணரட்ணவும் அவரது கட்சியைச் சார்ந்த திமுது ஆட்டிகலவும் கடத்தப்பட்டுள்ளனர். இது ஜனநாயக விரோத செயலாகும். எனவே இவர்களை விடுதலை செய்ய கண்டு பிடிக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
அண்மையில் கோட்டே ரஜமஹா விகாரையில் தேரர்கள் கொல்லப்பட்டனர். இரண்டு நாட்களுக்குள் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அரசியல் தலையீடு இல்லாவிட்டால் எமது பொலிஸார் தமது கடமைகளை திறமையாக நிறைவேற்றுவார்களென மகாநாயக்க தேரர்கள் கூறியுள்ளனர்.
இது உண்மையாகும். அரசியல் தலையீடுகள் காரணமாகவே குற்றவாளிகள் தப்பித்து விடுகின்றனர். அண்மையில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சாகல சேனாரத்ன கடத்தப்பட்டார். இதன் போது அவரது உறவினரான அமைச்சர் ஜீவன குமாரணதுங்க அரச தரப்பினரோடு இது தொடர்பாக பேச்சுக்களை நடத்திய பின்னர் 24 மணி நேரத்திற்குள் தண்ணீர் போத்தலுடன் விடுவிக்கப்பட்டார்.
எனவே கடத்தல்களின் பின்னணியில் அரசாங்கம் செயற்படுவதென்பது இதிலிருந்து புலனாகின்றது. குமார் குணரட்னம் அவுஸ்திரேலியப் பிரஜை. அவர் அந்நõட்டிலிருந்து இங்கு எப்படி வந்தார். எப்போது வந்தார் போன்ற கேள்விகளை அவுஸ்திரேலிய தூதுவரை அச்சுறுத்தும் விதத்தில் பாதுகாப்பு செயலாளர் கேள்விகளைக் கேட்டுள்ளார்.
இது ராஜ தந்திர ரீதியில் பிழையான அணுகு முறையாகும்.
கடத்தல்கள் பின்னணியில் அரசாங்கமே உள்ளது. அனைத்தும் மிக இரகசியமான முறையில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றது. நாட்டில் நாளுக்கு நாள் கடத்தல்கள் அதிகரித்துச் செல்கிறது.
காலையில் ஊடகங்களை பார்த்தோமானால் கொலை, கொள்ளை, கடத்தல்கள், பாலியல் வன்முறைகள் போன்ற குற்றச் செயல்கள் தொடர்பிலான செய்திகளையே காண முடிகின்றது.
நாடு மிகவும் பயங்கரமான நிலைமையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. இதனை தடுப்பதற்கு மக்கள் ஓரணியில் திரள வேண்டும். இல்லாவிட்டால் கடத்தல்கள் மலிந்த சர்வாதிகார நாடாக இலங்கை மாறி விடும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply