சர்வதேசம் எமது முன்னேற்றத்தை பலவீனப்படுத்த முயலக்கூடாது : ஜனாதிபதி
மூன்று தசாப்த பின்னடைவிற்குப் பின் நாட்டைப் பொருத்தமான விதத்தில் கட்டியெழுப்ப மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் சர்வதேசம் எமக்கு ஆதரவளிக்க வேண்டுமே தவிர பலவீனப்படுத்த முயற்சிக்கக்கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
மனித உரிமை தொடர்பில் எம் முன் எவரும் சவால் விட முடியாது. அது எமது கலாசாரத்தோடு பிணைந்தது என தெரிவித்த ஜனாதிபதி தேசிய தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்கும் செயற்பாடுகள் தொடர்வதாகவும் தெரிவித்தார்.
பொருளாதார முன்னேற்றத்தின் பலன்களை அடிமட்டத்திலுள்ள மக்களும் அனுபவிக்க வழிவகை செய்வதே அரசாங்கத்தின் இலக்கு என குறிப்பிட்ட ஜனாதிபதி, பயங்கரவாதத்தை ஒழிப்பதில் மக்கள் வாக்குறுதியை நிறைவேற்றியது போல ஆசியாவின் உன்னத நாடாக இலங்கையைக் கட்டி யெழுப்பும் வாக்குறுதியும் கைவிடப்பட மாட்டாது எனவும் தெரிவித்தார்.
மத்திய வங்கியின் 2011ம் ஆண்டுக்கான அறிக்கை நேற்று ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அமைச்சர்கள் பஷில் ராஜபக்ஷ, சரத் அமுனுகம, பிரதியமைச்சர் கீதாஞ்சன குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, மத்திய வங்கி ஆளுநர் அஜித் கப்ரால் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்;
இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் முதல் தடவையாக கடந்த வருடத்தில் எட்டு வீத பொருளாதார வளர்ச்சியை நாடு எட்டியுள்ளது. நாட்டின் சகல துறைகளினதும் மறுமலர்ச்சியே இதற்கு உறுதுணையாக அமைந்தது.
உலக நாடுகள் பொருளாதாரத்தில் பின் னடைவைக் கண்டு வரும் நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக எட்டு வீதத்திற்கும் மேற்பட்ட வலுவான பொருளாதார வளர்ச்சியை எட்ட எம் மால் முடிந்துள்ளது.
இது எங்கனம் சாத்தியமாகிறது என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். பொருளாதார அபிவிருத்தியின் பயனை மக்களுக்கு எப்படி வழங்க முடிந்தது என்பதை உணரவேண்டும். பயங்கரவாதத்தை ஒழித்து அரசாங்கத்தினால் மேற்கொள்ளப் பட்ட முறையான வேலைத் திட்டங்கள் மூலமே இத்தகைய பலனை அடைய முடிந்தது.
பயங்கரவாதம் நாட்டில் ஒழிக்கப்பட் டாலும் அதன் பின்னணியில் இயங்கிய சக்திகள் தேசிய சர்வதேச ரீதியில் முன் னேற்றகரமாக இயங்குகின்றன.
பாரிய தடைகள் எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே நாம் மஹிந்த சிந்தனைத் திட்டத்தை முன்வைத்தோம். அதன் பிரதிபலன்களை நாம் தற்போது காண முடிகின்றது. 100 ற்கு ஏழு வீதமாகவிருந்த வேலையில்லாப் பிரச்சினையை தற்போது இரண்டு வீதமாகக் குறைக்க முடிந்துள்ளது. வறுமையொழிப்பு நடவடிக்கைகள் முன்னேற்றகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 1400 டொலராகவிருந்த தனிநபர் வருமானத்தைத் தற்போது 2800 டொலராக அதிகரிக்க முடிந்துள்ளது. 2016ல் இதனை 4000 டொலராக அதிகரிப் பதே எமது இலக்காகும்.
நாம் யுத்தத்துக்கு முகம் கொடுத்த போதிலும் நாட்டின் பொருளாதாரத்திற்கு சிறந்த அடித்தளமிடுவதைத் தவிர்க்கவில்லை. அதன் பிரதிபலனாக தற்போது நாம் பாரிய அபிவிருத்திகள் பலவற்றை நிறைவு செய்ய முடிந்துள்ளது.
பல தசாப்தங்களுக்குப் பின்னர் துறை முகம் விமான நிலையங்களை புதிதாக நிர்மாணிக்க முடிந்துள்ளது. ஐந்து துறைமுகங்களில் மூன்றின் பணிகள் நிறைவடைந்துள்ளன. மின்சாரம் பற்றி கடந்த காலங்களில் பேசப்பட்டதேயொழிய ஆக்கபூர்வமான திட்டங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. தற்போது மின்சாரம், வீதியமைப்பு என பல திட் டங்கள் நிறைவடைந்துள்ளன.
முதலீட்டு வாய்ப்புக்கள்:
தேசிய, சர்வதேச முதலீடுகளுக்கு நாம் அதிகமான வாய்ப்பளித்துள்ளோம். சர்வதேச முதலீடுகள் தற்போது பில்லியன் டொலரைத் தாண்டியுள்ளன. யுத்தத்தின் மூலமான பின்னடைவுகள் தற்போது சரி செய்யப்பட்டு வருகின்றன. யுத்தம் தொடர்ந்திருந்தால் நாம் இந்த நிலையை எட்டியிருக்க முடியாது.
நம்பிக்கையுடன் செயற்பட்டதனால் நாம் மீண்டுள்ளோம்.
நாட்டில் நிலவிய மோசமான சூழ்நிலை காரணமாக நம்பிக்கையிழந்து பெருமள விலானோர் வெளிநாடுகளுக்குச் சென்றனர். இன்றைய சிறந்த சூழலில் அவர்கள் மீள திரும்புகின்றனர். நாம் பெற்றுக் கொண் டுள்ள பொருளாதார வெற்றியை தொடர் ந்து தக்க வைத்துக் கொள்வது முக்கியம்.
யுத்தத்தின் போது புதைக்கப்பட்ட மிதிவெடிகளை அகற்ற பத்து வருடங்கள் செல்லும் என கூறப்பட்ட போதும் படையினரின் அர்ப்பணிப்புள்ள செயற் பாடுகள் மூலம் தற்போது அந்த நடவடிக்கைகள் நிறைவு பெற்றுள்ளன.
வடக்கு, கிழக்கு அபிவிருத்தி:
யார் எத்தகைய பிரசாரங்களை மேற் கொண்ட போதும் அரசாங்கம் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு பெரும் முன்னுரி மையளித்து வருகிறது. வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு மட்டும் 260 பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிட்டுள்ளது.
2012 இல் 89 மில்லியன் ரூபா வரவு செலவு திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட் டுள்ளது. கல்வி, சுகாதாரம், மீன்பிடி, விவசாயம் என சகல துறைகளிலும் பெரும் நிதியினை அரசாங்கம் செலவிட்டு அத்துறைகளை முன்னேற்றி வருகிறது. எனினும் எமது அரசியல்வாதிகளுக்கு இது எதுவும் தெரிவதில்லை. அவர்கள் தவறான தகவல்களையே சர்வதேசத்திற்குத் தெரிவிக்கின்றனர்.
பல்வேறு அமைப்புக்கள் இவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஈடுபட்டுள்ளன. குறுகிய அரசியல் இலாபத்திற்காக மட்டமான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
உலக நாடுகளில் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு வரவு செலவு திட்ட குறைபாடு அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அரசுகளுக்கு எதிராக வீதிகளில் இறங்கியுள்ளனர். எனினும் இலங்கையில் ஒரு முறை வீதியில் இறங்கினால் பெரும் பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது.
நிந்தர சமாதானமே இலக்கு:
நாம் பல சவால்களை எதிர்கொள்கிறோம். எரிபொருட்கள் தொடர்ச்சியாக விலை யேற்றம் பெற்று வருகின்றன. உலக பொருளாதார பின்னடைவுக்கு மத்தியில் எமது பாரிய அர்ப்பணிப்பின் மூலம் நாம் பொருளாதார வெற்றியைக் கண்டுள்ளோம். நிரந்தரமான சமாதானத்தை நாட்டில் ஏற்படுத்த அரசாங்கம் தம்மை அர்ப்ப ணித்துள்ளது. அதற்கான வேலைத் திட்டங்கள் தொடர்கின்றன.
மூன்று தசாப்த பிரச்சினைகளுக்கு ஒரு இரவில் தீர்வு காண முடியாது. பல வருட குரோதங்கள், இனங்களுக்கிடை யிலான ஐக்கியம் சரிப்படுத்தப்பட வேண்டும். இதற்கான தீர்வினை நாம் இறக்குமதி செய்ய முடியாது.
வெளிநாட்டுத் தீர்வுகள் பற்றி நாம் அறிவோம். அவை நிரந்தரமானதல்ல.
தேசிய பிரச்சினைக்குத் தீர்வு:
நாம் தேசிய தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். பிரச்சினைகளைத் தெளிவோடு நோக்கி தீர்வு காணப்பட வேண்டியது அவசியம்.
வெளிநாட்டுத் தீர்வுகளுக்கு ஆயுள் மிகக் குறைவு. அவை தற்காலிகமானவை. பல நாடுகள் இதற்கு உதாரணமாகவுள்ளன.
ஏனைய நாடுகளை விட நாம் மனித உரிமை பேணலில் முன்னிலையில் உள்ளோம். எமது கலாசாரத்தோடு மனித உரிமை பின்னிப் பிணைந்துள்ளது. இதில் எவருக்கும் சவால் விடுக்க முடியாது. அதற்காக அன்றும் இன்றும் நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம்.
நாம் எமது நாட்டிற்கு ஏற்ற வேலைத் திட்டங்களை முன்னெடுக்கத் தயார். அதற்கான அனுபவம் எமக்கு உள்ளது. சர்வதேசம் இதற்கு ஆதரவு வழங்க வேண்டுமே தவிர எம்மைப் பலவீனப்படுத்த முயற்சிக்கக் கூடாது.
பயங்கரவாதத்தை முற்றாக நாட்டிலிருந்து ஒழிப்பதாக நாம் மக்களுக்கு வாக்குறுதி யளித்தோம். அதனை நிறைவேற்றியுள்ளோம். அதே போன்று ஆசியாவின் உன்னத நாடாக இலங்கையைக் கட்டியெழுப்பும் வாக்கு றுதியையும் கைவிட்டு விடவில்லை. நிறைவேற்றியே தீருவோம். நாட்டின் எதிர்காலத்திற்கான பயணத்தில் சகலரதும் பூரண ஒத்துழைப்பு தொடர்ந்தும் அவசியமாகும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply