13ம் திருத்தத்தை ஒழிக்க நினைப்பது இனவாத நோக்கத்தைக் கொண்டது

இலங்கையில் அரசியலமைப்பின் 13ம் திருத்தத்தை ஒழிக்க வேண்டும் என்று தொழில்சார் நிபுணர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு முன்வைத்துள்ள கோரிக்கைக்கு கண்டனக் குரல் எழுந்துள்ளது.

தொழில்சார் நிபுணர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் அமைப்பொன்று இவ்வாறான தீர்மானத்தை முன்வைப்பது இனவாத நோக்குடையது என்று மூத்த சட்டத்தரணியும் கொழும்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான கே.எஸ்.ரட்ணவேல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அனுசரணையுடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட இந்த யாப்புத் திருத்தமே, நாட்டில் இன்று இயங்கிக் கொண்டிருக்கும் மாகாணசபை முறைமைக்கு அடிப்படை என்பதை நிபுணர்கள் அமைப்பு புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சாதாரண சட்டத் திருத்தத்தைப் போல அரசியலமைப்பின் ஏற்பாடு ஒன்றை ஒழிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைப்பது விசனத்துக்குரிய விடயம் என்றும் சட்டத்தரணி ரட்ணவேல் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்திடம் தெளிவான அரசியல் தீர்வுத் திட்ட சிந்தனைகளோ அல்லது முறையான நல்லிணக்க முயற்சிகளோ இல்லை என்ற நிலையில், இவ்வாறான அமைப்புகள் பௌத்த சிங்கள மேலாதிக்க சிந்தனையையே தொடர்ந்தும் திணித்துவருவதாகவும் அவர் கூறினார்.

இலங்கை அரசாங்கம் அரசியல் தீர்வுத்திட்டமொன்றையோ ஒழுங்கான நல்லிணக்க நடவடிக்கைகளையோ முன்னெடுக்கும் என்ற நம்பிக்கை இனிமேலும் இல்லை என்ற நிலையில் நாட்டில் இனவாதமே மேலோங்கி வருவதாகவும் சட்டத்தரணி ரட்ணவேல் சுட்டிக்காட்டினார்.

போருக்குப் பின்னரான சூழ்நிலையில், அரசியல் தீர்வுத் திட்டம் குறித்து கருத்துக்களை முன்வைத்துவரும் இலங்கை அரசு, 13ம் திருத்தத்தை மையமாகக்கொண்ட அதிகாரப் பரவலாக்கல் தீர்வொன்றை முன்வைக்கும் என்று தமக்கு உறுதியளித்துள்ளதாக இந்திய உயர்மட்ட அதிகாரிகள் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply