காணி கொள்ளை எதிர்ப்பு பேரணிக்குத் தடை: வவுனியாவில் இன்று உண்ணாவிரதம்

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பொதுமக்களின் காணிகள் கையகப்படுத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரி வவனியாவில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நீதிமன்ற உத்தரவின் கீழ் தடைசெய்யப்பட்டதாக ஜேவிபியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை ஜேவிபியின் சகோதரத்துவத்தின் மக்கள் அரண் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

தடை உத்தரவையடுத்து, ஆர்ப்பாட்டப் பேரணியைத் தாங்கள் ஒத்தி வைத்துள்ளதாக ஊடகவியலாளர் மத்தியில் பேசிய சந்திரசேகரனும் ஜேவிபியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியும் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக பொலிஸாரே நீதிமன்றத் தடையுத்தரவைப் பெற்றிருந்ததாகவும், இதன் மூலம் அரசாங்கம் ஜனநாயக உரிமைகளைப் பறித்துள்ளதாகவும் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்களாகின்றன. ஆனால் வடக்கில் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்படவில்லை. நிர்வாகச் செயற்பாடுகளில் இராணுவத்தின் தலையீடு உள்ளது என்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக அவற்றைப் பெரிதுப்படுத்திச் செல்லுகின்ற நடவடிக்கைகளையே அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் சந்திரசேகரன் கூறியுள்ளார்.

இதற்கிடையில் தம்மை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி, வவுனியா உட்பட நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருவதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இன்று (24) வவுனியாவில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply