சுவிற்சர்லாந்திலிருந்து இலங்கை அகதிகள் நாடுகடத்தப்பட்டனர்
சுவிற்சர்லாந்தில் அரசியற் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட மூன்று தமிழர்கள் கடந்த வெள்ளிக்கிழமை இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பொய்யான வாக்குமூலங்களை வழங்கி புகலிடம்கோருவோரை மீண்டும் அவர்களின் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப சுவிஸ் அரசாங்கம் தீர்மானித்த நிலையிலேயே, இந்த மூன்று தமிழர்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
சுவிற்சர்லாந்தின் பல்வேறு பகுதிகளிலும் தங்கியிருந்த 2000 வரையான இலங்கை தமிழர்களின் புகலிடக் கோரிக்கையில் எந்தவொரு நியாயமான காரணமும் இல்லை என சுவிஸ் அரசாங்கம் கூறியுள்ளது.
கடந்த சில வாரங்களில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 13 தமிழர்கள் சுவிஸ் அதிகாரிகளால் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளியன்று திருப்பி அனுப்பப்பட்ட மூன்று தமிழர்களும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.
இவர்கள் சுவிஸ் நாட்டில் புகலிடம் கோருவதற்கான எந்தவொரு அடிப்படைகளையும் கொண்டிருக்கவில்லை.
இதேபோன்று சுவிற்சர்லாந்தில் உள்ள ஏனைய புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களை அந்நாட்டு அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இதேவேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் சேகரிக்கப்பட்ட நிதி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சுவிஸ் நாட்டின் இணைப்பாட்சி நிர்வாக வழக்கறிஞர்கள் மற்றும் சுவிஸ் இணைப்பாட்சி காவற்துறையின், குற்றங்களுக்கு எதிரான பிரிவினர் சிறிலங்காவுக்கு செல்லவுள்ளனர்.
இவர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 26 சாட்சிகளிடம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply