டெசோ மாநாடு! கருணாநிதிக்கு எதிராக வழக்கு

டெசோ மாநாட்டை நடத்துபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று கூறி உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நாளை (09) விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றில் சட்டத்தரணி ஆர்.பாலசுப்பிரமணியன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. தலைவர் கருணாநிதி, எதிர்வரும் ஒகஸ்ட் 12ம் திகதி சென்னையில் உள்ள ஓ.எம்.சி.ஏ. மைதானத்தில் டெசோ மாநாட்டை நடத்தபோவதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழக முதல்-அமைச்சராக கருணாநிதி இருந்தபோது, சுதந்திரத்துக்காக போராடிய லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்ய இலங்கை ஜனாதிபதிக்கு மறைமுகமாக உதவிகள் செய்தார்.

இவரது கட்சியை சேர்ந்தவர்கள் மத்திய அரசில் அங்கம் வகிக்கின்றனர். ஆனால், இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்படும்போது, இவர்கள் வாய் திறக்கவில்லை.

நார்வே நாட்டை சேர்ந்த அமைதி தூதுக்குழுவினர், இலங்கை போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறியபோது, கருணாநிதி தரப்பிலோ, மத்திய அரசு தரப்பிலோ ஒருவர் கூட அந்த இனப்படுகொலையை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், இப்போது இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக டெசோ மாநாட்டை கருணாநிதி நடத்துகிறார்.

இந்த மாநாட்டினால், இலங்கை தமிழர்களுக்கு எந்த பயனும் இல்லை. இந்த மாநாட்டுக்கு வரும் வி.ஐ.பி.களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டியது வரும். மேலும் இந்த மாநாட்டினால், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படும். எனவே டெசோ மாநாட்டுக்கு தடை விதிக்கவேண்டும்.

இந்த மாநாடு நடத்துபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோரிடம் 6.8.2012 அன்று மனு கொடுத்தேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply