காலத்தை வீணடிக்காது கற்றலை ஆரம்பியுங்கள்! யாழ். மாணவர்கள் கோரிக்கை

பல்கலைக்கழக விரிவுரைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் ஒழுங்கு செய்யப்பட ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (20) யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் பல்வேறுபட்ட பணிப் புறக்கணிப்பால் மூடப்பட்டுள்ள சூழ் நிலையில் மாணவர்களது கல்விசார் நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாத இறுதிவரை கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து இன்றுவரை விரிவுரையாளர்களும் தமது கோரிக்கைகளை முன்னிறுத்தி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் எமது பொன்னான கல்வி வீணடிக்கப்பட்டு வருகின்றது.

எனவே மேதகு ஜனாதிபதி அவர்கள் இவ் விடயத்தில் தலையிட்டு பல்கலைக்கழக விரிவுரைகளை உடன் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் அம் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள்,

1) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்த பட்சம் 6% இலவசக்கல்விக்கு ஒதுக்க வேண்டும். இதன் மூலம் நிறைவேறான தரமான இலவச கல்வி தொடர்ந்து போனப்பட வேண்டும்.

2) உயர்கல்வியை தனியார் மயப்படுத்துவதில் ஒரு முறையான ஒழுங்கு முறையையும் இலவச கல்வியை தொடர்ந்து அதே தரத்தில் பேணப்படவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3) பட்டதாரி மாணவர்களின் கல்வித்தகமைக்கேற்ப தரமான வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

4) பல்கலைக்கழக மாணவர் அனுமதியில் இசட்(Z) புள்ளி பற்றிய குளறுபடிகள் நீக்கப்பட்டு பல்கலைக்கழக அனுமதிகள் உரிய வேளையில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

5) பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கல்விசார ஊழியர்கள் ஆகியோரின் சம்பள பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் சுமூகமாக தொடர்ந்து இடம்பெற அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  என குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply