முள்ளி வாய்க்காலில் எல்லாம் முடியும்வரை வேடிக்கை பார்த்தவர்கள் தமிழ் தலைவர்கள்

முள்ளி வாய்க்காலில் இறுதி யுத்தம் நடந்த போது- எமது உறவுகள் துடிதுடித்து மடிந்த போது- யாழ்ப்பாணத் தலைவர்கள் கூட்டம் ஆளுக்கொரு திசையாக அறிக்கைகளை மட்டும் ஊடகங்களுக்குத் தெரிவித்த வண்ணம் செயல் வடிவில் எதனையும் வெளிக்காட்டா வண்ணம் மௌனித்திருந்தது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றஞ்சாட்டினார்.

மகிழடித்தீவு கண்ணகியம்மன் ஆலய முன்றலில் அண்மையில் இடம் பெற்ற அரசியல் பிரச்சாரக் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:

அரசினை எதிர்த்து அரசியல் செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் யாரும் இலங்கை பாராளுமன்ற உறுப்புரிமை என்ற அந்தஸ்தினை இராஜினாமா செய்யவும் இல்லை – பாராளுமன்றத்தினை விட்டு வெளியேறி எம் மக்களுக்கு நியாயம் வேண்டும் எனக் கூறி எந்த ஓர் ஆர்ப்பாட்டத்தினையும் நடத்தவில்லை.

அவர்கள் வாய் திறக்காமல் எல்லாம் முடியும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அத்தனை உறவுகளும் மடிந்த பின்னர் இன்று என்ன கூறுகின்றார்கள்?
முள்ளி வாய்க்கால் எமது முடிவல்ல மீண்டும் தொடரும் அது தான் ஆரம்பம். கல்லறைகளின் ஈரம் கூடக் காயவில்லை. இன்னும் எஞ்சியிருக்கின்ற எமது மக்களையும் அழித்து அந்தச் சூட்டிலேயே குளிர்காயத் தயாராகி விட்டார்கள்.

எம் இளைஞர்களையும்- குழந்தைகளையும் மரண களத்திற்கு அனுப்பத் தயாராக இருக்கும் இந்தக் கூட்டமைப்பினர் தாங்கள் பெற்ற பிள்ளைகளை துப்பாக்கி எந்த அனுமதிப்பார்களா?

அவர்கள் தங்களது பிள்ளைகளை எங்கே அனுப்பி வைக்கிறார்கள்? றோயல் கல்லூரி- ஆனந்தா கல்லூரி- நாலந்தா கல்லூரி- இன்னும் பிரபல்யம் பெற்ற- கல்வித் தரம் வாய்ந்த- வசதி மிக்க பல்வேறுபட்ட சிறப்பான பாடசாலைகளுக்கு.

அதன் பின்னர் என்ன செய்வார்கள்? கற்றுத் தேர்ந்த தமது பிள்ளைகளை உயர்கல்விக்காக லண்டன்- கனடா- ஜேர்மனி என்று மேலைத்தேய நாடுகளுக்கு அனுப்புவார்கள்.

பின்னர் துறைசார் நிபுணர்களாக விளங்கும் அவர்களது பிள்ளைகள் வெளிநாடுகளில் சிங்களவர்களையோ அல்லது மேலை நாட்டவர்களையோ திருமணம் செய்து கொண்டு சந்தோசமாய்க் காலம் கழிப்பார்கள்.

இங்கு துப்பாக்கிக் குண்டுபட்டு மடிவது யார்? இங்கு பாடசாலைக் கல்வியினைக் கைவிட்டு கல்வி கற்க வழியின்றி ஏங்கித் தவிப்பவர்கள் யார்? தாய்- தந்தையர்களை இழந்து அநாதைகளாவது யார்? யுத்தத்தில் கணவனை இழந்து விதவைகளாவது யார்?
நன்றாக சிந்தித்துப் பாருங்கள்.

கூட்டமைப்பினரின் பிள்ளைகளுக்கு சுகவாழ்வு- உங்கள் பிள்ளைகளுக்கு சுடுகாடு. இது தான் சமத்துவமும்- எமது சமூக நீதியும். இந்த நியாயமும்- நீதியும் உங்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியவைகளாக இருக்கின்றதா? இவற்றை நியாயம் என்று ஏற்றுக் கொள்ள முடியும் என்றால் கூட்டமைப்பினருக்கு வாக்களியுங்கள் என்றும் முதலமைச்சர் வேட்பாளர் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply