கொழும்பில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு புதிய வீடுகள்
தலைநகர் கொழும்பில் வாழும் சேரிப்புற மற்றும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 65 ஆயிரம் குடும்பங்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய வீடுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன. இது இந்த மக்களின் குடிமனை பிரச்சினைக்கு வரப்பிரசாதமாக அமையும். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவினால் முன்வைக்கப்பட்ட இந்த ஆலோசனைக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதனை அமைச்சரவை பேச்சாளர் ஊடக மற்றும் தகவல் தொடர்பாடல்கள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல செய்தியாளர்களிடம் அறிவித்திருந்தார். இந்த வீடமைப்புத் திட்டம் தொடர்பாக அமைச்சர் மேலும் கூறியதாவது தலைநகரில், சேரிப்புற மற்றும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கென கொழும்பில் 65 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளன. அதற்கென நகரின் புறப் பகுதியில் இருந்து 15 இடங்கள் அடையாளம் காணப்பட்டன.
15 வீடமைப்புத் திட்டங்களும் சகல வசதிகளுடன் கூடிய தொடர்மாடிகளாக அமைக்கப்படும். அங்கு வர்த்தக மற்றும் கூட்டு அபிவிருத்தி முயற்சிகளும் உருவாக்கப்படும்.
தெமட்டகொட 54ஆவது தோட்டப் பிரதேசத்தில் 35 ஏக்கர் காணி முதற்கட்டப் பணிகளுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 9,781 வீடுகளை அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவை அடுத்த இரண்டு வருடங்களில் பூர்த்தியடைந்துவிடும். அரச காணிகளில் அமைக்கப்படவிருக்கும் இந்த வீடுகள் இலவசமாகவே பொது மக்களுக்கு வழங்கப்படும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply