இனப்பிரச்சினை தீர்வில் அரசாங்கத்திற்கு எந்தவித அக்கறையும் இல்லை

இனப்பிரச்சினை தீர்விற்கு அரசாங்கம் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்குள் வருமாறு கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுத்திருக்கும் நிலையில் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் கூட்டமைப்பினர் இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமான தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது,

இந்நாட்டில் இனப்பிரச்சினையை கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தையின் மூலம் சரியான முறையில் தீர்த்து வைப்பார்கள் என்ற அடிப்படையிலேயே அவர்களுக்கு மக்கள் வாக்களித்தார்கள். இந்நாட்டில் தமிழ் மக்கள் சரிசமமாக சகல உரிமைகளுடன் வாழ்வதற்கும், மீள்குடியேற்றங்கள் சரியான முறையில் இடம்பெறுவதற்கும், அப்பாவி தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை பெறுவதற்கும், யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவுகள் சீரமைக்கப்படுவதற்கும், வடகிழக்கில் பாடசாலைகளை கட்டியெழுப்பி கல்வி தராதரத்தை உயர்த்துவதற்கும் இவ்வாறான அனைத்து தமது தேவைகளை கூட்டமைப்பினர் நிறைவேற்றி வைப்பார்கள் என்ற நம்பிக்கையை வடகிழக்கு மக்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில்,

இது சம்பந்தமாக கூட்டமைப்பினர்; எவ்வாறான வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். மீள்குடியேறிய மக்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு நிதி சேகரிப்பதோ அல்லது கோயில்களுக்குச் சென்று கைதிகளின் விடுதலைக்காக தேங்காய் உடைப்பதற்கோ மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று கூட்டமைப்பினர் மத்தியில் சில முரண்பாடுகள் எழுந்துள்ளமையை ஊடகங்கள் மூலம் அறிய முடிகிறது. இதனை நாம் பெரிது படுத்த விரும்பவில்லை. ஆனால் இந்த முரண்பாடுகளுக்கு அடிப்படை காரணம் இவர்களது அரசியல் தெளிவின்மையே ஆகும். இனப்பிரச்சினை தீர்விலோ மக்கள் எதிர்ப்பார்க்கும் ஏனைய விடயங்களிலோ இவர்கள் அக்கறை காட்டுவதில்லை.

மாறாக அரசாங்கத்திற்கு சவால் விடுவதிலும் அதன் மூலம் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் புகழ் பெறுவதிலுமே இவர்கள் நாட்டம் கொள்கின்றனர். யுத்தம் முடிவுற்று மூன்று வருடங்களுக்கும் மேலாகியும் அரசாங்கம் இனப்பிரச்சினை தீர்வில் எவ்வித அக்கறையும் இல்லாமல் இருக்கின்றது என்பது உண்மைதான்.

அதனை விமர்சிக்கும் நாங்கள் இனப்பிரச்சினை தீர்வில் எவ்விதமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம் என்பதனையும் சிந்தித்து பார்க்க வேண்டும். தமிழ் மக்களாகிய எமக்குத்தான் இனப்பிரச்சினை தீர்வில் அதிக அக்கறை இருக்க வேண்டுமே ஒழிய சிங்கள மக்களுக்கு அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குகளுக்காக தமிழர் ஒற்றுமை பற்றியும் வீர வசனங்களைப் பேசியும் வாக்குகளைப் பெற்று தமது பிரதிநிதித்துவங்களை அதிகரித்துக் கொள்வதிலேயே கூட்டமைப்பினர் ஆர்வம் காட்டுகின்றனர்.

இருப்பினும் இன்னும் வடகிழக்கு மக்கள் கூட்டமைப்பினர் மீது அதீத நம்பிக்கை கொண்டிருக்கிறர்கள் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. மக்களின் இந்த நம்பிக்கையை வீணடிக்காமல் இனப்பிரச்சினை தீர்வில் கூட்டமைப்பினர் ஏதாவது அவசரமான செயல்பாட்டை முன்னெடுக்க வேண்டும். இதற்காக சிங்கள அரசாங்கத்தின் காலடியில் இவர்களை விழசொல்லவில்லை. இன்னும் சில ஆண்டுகள் இப்படியே செல்லுமாயின் இனப்பிரச்சினை தீர்வு என்ற விடயத்தை இலங்கை அரசாங்கம் மட்டுமல்ல சர்வதேசமும் மறந்து போய் விடும்.

கிழக்கு மாகாணசபை முடிவுகளின் மூலமாக தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற கூட்டமைப்பினர் எமது மக்களுக்காக சாதிக்கப் போவது என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் மூலமாக நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை வடகிழக்கு மக்களுக்கு மட்டுமல்ல மலையக இந்திய வம்சாவளி மக்களுக்கும் கூட இருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக நாம் அதனை இழந்து விட்டோம்.

அதே நிலைமைக்கு மீண்டும் எமது மக்களை தமக்கிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் மூலமாக கூட்டமைப்பினர் கொண்டு சென்றுவிடுவார்களோ என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆகவே வெறும் ஊடக அறிக்கை அரசியலை தவிர்த்து உடனடியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் கூட்டமைப்பினர் இறங்குவார்களேயானால் நாட்டிலுள்ள அனைத்து தமிழ் அரசியல் தலைவர்களும் அவர்களுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply