மாறி மாறி அழைப்பு விடும் தலைவர்கள்
ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவை, எமது எதிரணி கூட்டமைப்பில் இணைந்து கொள்ளுமாறு நாம் அழைத்துள்ளோம். ஐக்கிய தேசிய கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய சமவுடைமை கட்சி, நவ சமசமாஜ கட்சி ஆகிய பல்வேறு கட்சிகள் உள்ளடங்கும் எதிரணி கூட்டமைப்பில் அவரது கட்சியையும் இணைத்துகொண்டு இந்த அரசாங்கத்தை வீழ்த்தும் பொது போராட்டத்தை முன்னெடுப்போம் என நான் சரத் பொன்சேகாவுக்கு கூறியுள்ளேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தாம் அமைக்கவுள்ள எதிர்கட்சி கூட்டில், ஜனநாயக மக்கள் முன்னணியும் இணையவேண்டுமென மனோ கணேசனுக்கு, ஜெனரல் சரத் பொன்சேகா அழைப்பு விடுத்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில், கருத்து தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
எதிர்வரும் பதினெட்டாம் திகதி கொழும்பு ஹைட்பார்க் திடலில் நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு சரத் பொன்சேகா எனக்கு நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவருடன் இணைந்து செயற்படும் பல ஐதேக பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த அழைப்பை எனக்கு விடுத்துள்ளார்கள். ஜனநாயக மக்கள் முன்னணி, தேசிய தளத்தில் விறுவிறுப்பாக செயற்படும் ஒரு அரசியல் கட்சி என்பதால் எமக்கு இத்தகைய அழைப்புகள் கிடைப்பது ஆச்சரியம் அல்ல.
பதினெட்டாம் திகதி கூட்டம், அரசியல் கட்சி கூட்டமைப்பு ஒன்றின் ஆரம்ப அமைப்பு கூட்டம் அல்ல என்றும், அது அரசு எதிர்ப்பு பொதுக்கூட்டம் என்றும், பல்வேறு சிங்கள-பெளத்த அரசியல், மத, சமூக தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ள இந்த கூட்டத்தில், நானும் கலந்துகொண்டு தமிழ் மக்கள் சார்பாக கருத்துரையாற்றி அந்த நிகழ்வுக்கு தேசிய அடையாளத்தை தரவேண்டும் என தான் விரும்புவதாக சரத் பொன்சேகா என்னிடம் தெரிவித்தார்.
அவரது அழைப்புக்கு நான் நன்றி தெரிவித்துள்ளேன். ஆனால் பதினெட்டாம் திகதி கொழும்பில் நடைபெறும் கூட்டத்தில் நமது கட்சி கலந்துகொள்வது தொடர்பில் நான் இணக்கம் தெரிவிக்கவில்லை. எது எப்படி இருந்தாலும் எதிர்வரும் 11ம் திகதி வியாழக்கிழமை நடைபெற ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எமது அரசியற்குழு கூட்டத்தில் இது தொடர்பாகவும் நாம் ஆராய்வோம் என அவருக்கு கூறினேன்.
அதேவேளையில், நமது கட்சி உட்பட ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய சமவுடைமை கட்சி, நவ சமசமாஜ கட்சி ஆகிய பல்வேறு எதிர்கட்சிகள் பங்குகொண்டுள்ள எதிரணி கூட்டமைப்பில், தமது கட்சியையும் இணைத்துகொள்ளுமாறு நான் சரத் பொன்சேகாவுக்கு அழைப்பு விடுத்துள்ளேன். எதிரணியின் குறைந்தபட்ச பொது வேலைத்திட்டத்தை ஏற்றுகொள்ளும் கட்சிகளை இணைத்து கொள்வது என்ற நிலைப்பாட்டை எதிரணி கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்தில் நாம் ஏற்கனவே எடுத்துள்ளோம்.
ஆளுகின்ற இந்த அரசாங்கத்தை தனி ஒரு கட்சியினால் வீழ்த்த முடியாது என்ற நிலைப்பாட்டில் நமது கட்சி உள்ளது. இந்த அரசாங்கம் வீழ்த்தப்படவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். இதற்காக அனைத்து எதிர்கட்சிகளும், சமூக அமைப்புகளும் ஒன்று சேர வேண்டும். இன்று ஆளுகின்ற அரசாங்கத்தில் இருக்கின்ற கட்சிகளும் உரிய காலத்தில் எம்முடன் இணையக்கூடிய அரசியல் சூழலை நாம் ஏற்படுத்த வேண்டும்.
சரத் பொன்சேகாவுடன் ஐதேகவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இணைந்து செயல்படுவது பற்றி நாம் கருத்து தெரிவிக்க முடியாது. அது ஐதேகவின் உள்விவகாரம். இதை அந்த கட்சி சுமூகமாக தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும், ஐதேகவின் உள்விவகாரம் அரசாங்கத்தை வீழ்த்தும் முயற்சிகளுக்கு தடையாக இருக்க கூடாது எனவும் நாம் விரும்புகிறோம்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply