பிள்ளைகளை பெற்றோருடன் வாழ விடுங்கள்! கொழும்பில் ஆர்ப்பாட்டம்
கொழும்பிலுள்ள நோர்வே தூதரகத்திற்கு முன்னாள் இன்று 5ம் திகதி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. நோர்வேயில் பிரஜாவுரிமைப் பெற்றவர்களின் உறவினர்களால் இன்று முற்பகல் 11.30 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. நோர்வே அரசாங்கத்தின் கீழ் இயங்கி வருகின்ற சிறுவர் காப்பகத்தினால் தமது பிள்ளைகள் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டதை கண்டித்தும், அவர்களை மீட்டு தருமாறும் வலியுறுத்தியும், ஒஸ்லோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் தாய்மாரைக் காப்பற்றக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
நோர்வே சட்டத்தின்படி வீடுகளிர் சிறுவர்கள் பெற்றோர்களால் அடித்துத் துன்புறுத்தப்பட்டால் அச்சிறுவர்களை நோர்வே அரசு பொறுப்பேற்று அவர்களை வழிநடத்தும்.
இலங்கையர் உட்பட வெளிநாட்டவர்கள் பலரது பிள்ளைகள் இந்த சிறுவர் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளனர். பிள்ளைகளை ஒழுங்கான முறையில் பராமரிக்காததாலும், கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் சண்டையால் குழந்தைகள் பாதிக்கப்படுவதாலும் அவர்களை பெற்றோரிடமிருந்து பிரித்து தாம் பராமரித்து வருவதாக நோர்வே அரசாங்க தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு நோர்வே காப்பகத்தினால் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட இலங்கையர்கள் உட்பட சர்வதேச நாடுகளைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள் பெரும் துயரங்களை அனுபவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சிறுவர் காப்பகத்தினால் அழைத்துச் செல்லப்பட்ட சிறுவர்கள் பல வீடுகளில் பணியாட்களாக அமர்த்தப்பட்டுள்ளதாகவும், பாலியல் துன்புறுத்தல்களுக்கு முகம் கொடுப்பதாகவும் பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோர் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் தமது பிள்ளைகளை மீட்பதற்காக நோர்வே பிரஜாவுரிமைப் பெற்ற இலங்கை வாழ் தாய்மார் இருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒஸ்லோவில் அமைந்துள்ள டோம் தேவாலயத்திற்கு முன்னால் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ள நிலையில் உண்ணாவிரதம் இருப்போரைக் காப்பாற்றக் கோரியும், தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை காப்பாற்றக்கோரியும், இலங்கையில் இருக்கும் உறவினர்களினால் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் நோர்வே தூதுவராலயத்தில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. நோர்வேயில் தமது பிள்ளைகளைப் பறிக்கொடுத்த பெற்றோர் கருத்து வெளியிட்டுள்ளனர். (காணொளியில் காண்க..)
இதேவேளை, இச்சம்பவம் குறித்து ஆராய்ந்து பார்ப்பாதாக இலங்கையிலுள்ள நோர்வே தூதரகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply